இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச – பிளேயிங் லெவன் இதுதான்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை மறுதினம் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்க இருக்கிறது.
இந்த போட்டிக்காக இருஅணி வீரர்களுமே தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வட்டத்திற்குள் இருப்பதால் இந்த தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனின் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்? எந்தெந்த வீரர்கள் எந்தெந்த இடத்தில் விளையாடுவார்கள்? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பதை நாங்கள் இங்கே உங்களுக்காக உத்தேச பட்டியலாக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரே விளையாடுவார்கள்.
ஏனெனில் சமீப காலமாகவே அவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரர்களாக களமிறங்கி வரும் வேளையில் அவர்களே இந்த தொடரிலும் துவக்க வீரர்களாக நீடிப்பார்கள். அதேபோன்று மூன்றாவது இடத்தில் சுப்மன் கில்லும், நான்காவது இடத்தில் விராட் கோலிக்கு பதிலாக கே.எல் ராகுலும் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. ஐந்தாவது இடத்தில் வழக்கம் போல் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார்.
விக்கெட் கீப்பர் இடத்தில் கே.எஸ் பரத் இந்த போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் 7, 8, 9 ஆகிய இடங்களில் சுழற்பந்து வீச்சாளர்களாக ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோரும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அவர்களை தவிர்த்து இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக 10 மற்றும் 11-வது இடத்தில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் விளையாடுவார்கள்.