சென்னை அஜந்தா மேம்பாலம் இடிப்பு..!
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் – சிறுசேரி சிப்காட்வரையிலான ஒரு வழித்தடம் ராயப்பேட்டை வழியாகச் செல்கிறது.
சுரங்கப்பாதையில் செல்லும் இந்த பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர் (திருமயிலை), மந்தைவெளி ஆகிய இடங்களில் சுரங்கத்தில் ரயில் நிலையம் அமைய உள்ளது. குறிப்பாக, 3-வது, 5-வது ஆகிய 2 வழித்தடங்கள் சந்திக்கும் பகுதியான திருமயிலையில் பிரம்மாண்ட மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது.
இதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்க இருப்பதால் இந்த பகுதிகளில் ஏற்கெனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ரயில் நிலையம் பூமிக்கு அடியில் 15 முதல் 18 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்லும் பாதையும், வெளியே வரும் பாதையும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு அருகில் அமைகிறது.எனவே, பணிகளுக்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தின் ஒரு பகுதியை இம்மாத இறுதியில் இடிக்க திட்டமிட்டனர்.
இந்நிலையில், மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட பணிகளுக்காக சென்னை ராயப்பேட்டையில் அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் மேம்பாலத்தை இடிக்கும் பணி நடைபெறுகிறது மேம்பாலம் இடிப்பு பணி காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மயிலாப்பூர், மந்தவெளி, அடையாறுக்கு செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.