இதுதான் பொறியியல் அதிசயம்.. அடல் சேது பாலத்தில் இருக்கும் 8 டெக்னாலஜி என்ன தெரியுமா?
அடல் சேது பாலம் அல்லது மும்பை டிரான்ஸ் துறைமுக இணைப்புச் சாலை (MTHL) என அழைக்கப்படும் இந்த 21 கி.மீ நீளமுள்ள பாலம் சமீபத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் என்பதோடு பொறியியல் அதிசயம் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. மும்பை பகுதியில் உள்ள போக்குவரத்தை நிச்சயம் இது மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையின் கடல் மேல் கம்பீரமாக நிற்கும் இந்தப் பாலம் இந்தியாவின் வளர்ந்து வரும் பொறியியல் ஆற்றலுக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. ஐந்து வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் பல தொழில்நுட்பங்கள் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அடல் சேது பாலம் அதிக திறன் வாய்ந்ததாகவும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும் உள்ளது.
ஏன் அடல் சேது பாலத்தை பொறியியல் அதிசியம் எனக் கூறுகிறோம் தெரியுமா? இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 8 நவீன தொழில்நுட்பங்கள் தான் காரணம். அது என்னவென்று ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம்.
நிலநடுக்கத்தை தாங்கும் வடிவமைப்பு:
அதிர்ச்சியை தாங்கும் வகையில் பாலத்தின் அடித்தளத்தில் ஐசோலேஷன் உருளைகள் பயன்படுத்தபட்டுள்ளது. இது ஷாக் அப்ஸராக செயல்படுவதால், நிலநடுக்கம் வந்தால் கூட பாலம் சிறிதளவு நகருமே தவிர உடைந்து போகாது. ரிக்டர் அளவில் 6.5 வரையுள்ள நிலநடுக்கத்தை இந்தப் பாலத்தின் வடிவமைப்பு தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
புதுமையான ஸ்டீல் தளம்:
இந்தப் பாலத்தின் தள வடிவமைப்பில் நெளிந்த ஸ்டீல் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக பாலத்தின் கட்டுமானம் உறுதியோடும் நீடித்தும் இருக்க ஸ்டீல் பீம்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பாரம்பரியமான கான்க்ரீட் தளத்தை விட இந்த ஸ்டீல் தளம் லேசாக இருப்பதால், பாலத்தின் ஒட்டுமொத்த எடை குறைந்து கடலிலிருந்து வீசும் காற்று மற்றும் அலைகளை எதிர்த்து தாக்குப்பிடிக்கிறது.
நீண்ட இடைவெளி:
ஸ்டீல் தளத்தை பயன்படுத்தியதால் தூண்களுக்கு இடையே நீண்ட இடைவெளி கிடைக்கிறது. இதனால் பாலத்திற்கு குறைவான தூண்கள் பயன்படுத்தினாலே போதும். இதன் காரனமாக பாலத்தின் அழகு மேலும் கூடுகிறது. அதுமட்டுமின்றி கான்க்ரீட் தளத்தை விட இதை பராமரிப்பது பரிசோதிப்பதும் எளிது.
ரிவர்ஸ் சர்குலேஷன் ரிக்ஸ்:
இந்த பிரத்யேகமான ரிக்ஸ் பாலத்தில் ஏற்படும் சத்தம் மற்றும் அதிர்வுகளை குறைக்கிறது. இதனால் பாலத்தைச் சுற்றியுள்ள கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்படுகிறது.
ஓசை தடுப்பு நடவடிக்கைகள்:
வாகனங்களின் இரைச்சலினால் பாலத்தில் ஏற்படும் தாக்கத்தை குறைக்க பாலத்தின் இரு கரைகளிலும் ஓசை தடுப்புகளும் சைலன்சர்களும் உள்ளன.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விளக்குகள்:
குறைந்த ஆற்றலை பயன்படுத்தும் LED விளக்குகள் பாலத்தில் பொறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
திறந்தவெளி சுங்கவரி அமைப்பு:
எலெக்ட்ரானிக் சுங்கவரி கட்டண வசூலிப்பு முறை இந்தப் பாலத்தில் பின்பற்றப்படுகிறது. இதனால் கட்டணம் செலுத்த வாகனத்தை நிறுத்த வேண்டிய தேவையில்லை. இதனால் தேவையில்லாத போக்குவரத்து நெரிசல் குறைகிறது.
ரியல் டைம் டிராஃபிக் தகவல்கள்:
பாலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிவிக்கும் தகவல் பலகைகள் இருப்பதால் வாகன ஓட்டுனருக்கு தேவையான தகவல்கள் உடனடியாக கிடைக்கின்றன.