இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்க.. கருப்பை வாய் புற்றுநோயை எளிதில் தவிர்க்கலாம்..!

ஒவ்வொரு வருடமும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக உலகம் முழுவதும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோர் இறக்க நேரிடுகிறது. இதில் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

எந்தவிதமான ஒழுங்குப்படுத்தப்பட்ட பரிசோதனையோ அல்லது HPV தடுப்பூசி திட்டங்களோ இல்லாத ஏழை நாடுகளில் வாழும் பெண்களுக்கு தான் 90 சதவிகித கருப்பை வாய் புற்றுநோய் தாக்குகிறது. வளர்ந்த நாடுகளில் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம், கடந்த முப்பது ஆண்டுகளில் அங்கு முறையான பரிசோதனை மற்றும் நோய் கண்டறிதல் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.

இந்த புற்றுநோய்க்கு சிகிச்சை என்று பார்த்தால், நோயின் தீவிரத்தன்மையை பொறுத்து மாறுபடும். ரேடிகல் ஹிஸ்டெரெக்டோமி அல்லது கீமோ ரேடியேஷன் அல்லது இரண்டும் சேர்த்து கூட சிகிச்சை அளிக்கலாம். கருப்பை வாய் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். இன்றைய காலத்தில் சிகிச்சை மூலம் பெண்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் மூலம் குறைக்க முடியும்.

கருப்பை வாய் புற்றுநோய் ஒருவரை தாக்குவதற்கு ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) மூலம் ஏற்படும் தொற்றே முக்கிய காரணமாக இருக்கிறது. நாம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் பழக்க வழக்கத்தை கடைப்பிடித்தால் கருப்பை வாய் புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்க முடியும்.

பாதுகாப்பான உடலுறவு:

உடலுறவில் ஈடுபடும் போது எப்போதும் காண்டம் அணிய வேண்டும்; அதையும் சரியாக அணிய வேண்டும். அப்போதுதான் HPV தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். அதிகமான நபர்களோடு பாலியல் உறவில் இருந்தால் HPV தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

HPV தடுப்பூசி:

HPV தொற்று வராமல் தடுப்பதில் இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது. ஆண்களும், பெண்களும் இந்த HPV தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். பாலியல் உறவில் ஈடுபடும் போது இது சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

முறையான பரிசோதனை:

தகுந்த மருத்துவரிடம் சென்று Pap smears மற்றும் HPV பரிசோதனையை அவ்வப்போது மேற்கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், புற்றுநோய் வளர்ச்சி பெறுவதை தடுக்க முடியும்.

புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்:

புகைப்பிடிப்பதற்கும் கருப்பை வாய் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்புள்ளது. புகையிலையில் உள்ள தீங்குவிளைவிக்கும் பொருட்கள் கருப்பை வாயில் உள்ள செல்களை பாதித்து HPV தொற்று ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் கருப்பை வாய் புற்றுநோய் தாக்கும் ஆபத்து குறைவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை:

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை டயட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். சீரான உடற்பயிற்சி மூலம் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். இவற்றோடு சேர்த்து அடிக்கடி கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். மருத்துவர் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *