கடவுளின் பெயரால், வெளியேறு… நெதன்யாகுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முன்னாள் இஸ்ரேல் பிரதமர்
காஸாவில் போரை முடிவுக்கு கொண்டுவர, இஸ்ரேலில் உடனடியாக பொதுத் தேர்தல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் Ehud Barak அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல், காசா சேற்றில் மூழ்கிவிடும்
பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், இஸ்ரேல் வரும் ஆண்டுகளில் காசா சேற்றில் மூழ்கிவிடும் என்றும் எஹுத் பராக் சாடியுள்ளார்.
இஸ்ரேலில் பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமராகவும் பொறுப்பு வகித்துள்ள எஹுத் பராக், பொதுமக்களால் பெரிதும் கொண்டாடப்படும் ராணுவ வீரராவார். தற்போது 81 வயதாகும் எஹுத் பராக் தெரிவிக்கையில்,
நெதன்யாகு ஆட்சியில் தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல, அவர் பதவி விலகுவதே முறை, தேர்தல் மட்டுமே காஸா போருக்கு தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 100 நாட்களைக் கடந்துள்ள ஒரு போரில் இருந்து இஸ்ரேல் தன்னைத் தானே வெளியேற்றிக் கொள்ள வேண்டிய நேரம் கடந்துவிட்டது என்றார் பராக்.
1940களில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த பராக், கடவுளின் பெயரால், பதவியைவிட்டு வெளியேறு என்று நெதன்யாகுவை வலியுறுத்தியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த திட்டமும் இன்றி, இரத்தக்களரியான, பழிவாங்கும் போரை நெதன்யாகு தொடர்கிறார் என பராக் காட்டமாக விமர்சித்துள்ளார்.