ஹூண்டாய் கிரெட்டாவின் புது மாடல்.. எப்படி இருக்கு கார்? விலை மற்றும் விவரங்கள்!!
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனம், அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் (Creta Facelift) காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட இந்தக் காரின் ஆரம்ப விலை ரூ.10.99 லட்சம் ஆகும். ஆர்வம் இருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த மிட் சைஸ் SUV காரை ஹூண்டாயின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இந்தக் காரை புக் செய்யும் வசதி உள்ளது.
2024 ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்ஸ்
பல அழகியல் மாற்றங்களோடு இந்த அப்டேட் மாடல் வந்துள்ளது. கிரெட்டா காரை பார்ப்பதற்கு முன்பை விட அழகாகவும் ஸ்டைலாகவும் ப்ரீமியம் லுக்கிலும் உள்ளது. காரின் உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக காரின் முன்பகுதி முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது; புதிய கிரில் அமைப்பு, லெவல் 2 ADAS வசதி, பத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
வெளிப்புற அப்டேட்ஸ்
காரின் வெளிப்புறத்தை பொறுத்தவரை, டஸ்கானைப் போன்ற முன்பகுதி, முழுமையான LED ஹெட்லைட் செட்டப், L வடிவிலான LED DRL, முன்பக்கத்தில் கனமான ஸ்கிட் பிளேட், க்ரில் பகுதியில் ஹூண்டாய் லோகா போன்ற மாற்றங்கள் காருக்கு ஒரு ஆக்ரோஷமான தோற்றத்தை தருகின்றன.
புதிய கிரெட்டா காரின் நீளம், உயரம், அகலம் போன்ற அனைத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2,610 mm வீல்பேஸ் இருப்பதால், அதிகமானோர் பயணிக்கும் போதும், எந்த வகை சாலையிலும் கூட எந்த தொந்தரவும் இல்லாமல் செல்லலாம்.
உள்புற அப்டேட்ஸ்
காரின் உள்ளே புதிய 10.25 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அதற்கு உதவியாக ஆப்பிள், ஆண்டிரய்டு மற்றும் ஆட்டோ கார் பிளே போன்ற வயர்லெஸ் தொழில்நுட்ப வசதி உள்ளது. மேம்படுத்தப்பட்ட இன்ஸ்டுரூமெண்ட் கிளஸ்டர் மூலம் எரிபொருள் இருப்பு, காரின் வேகம், RPM, மைலேஜ் போன்ற தேவையான தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.
ப்ரீமியம் லுக்கில் கேபின்
புதிய கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ப்ரீமியம் லுக்கை அதிகரிக்கும் வண்ணம், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல ஆச்சர்ய வசதிகளை சேர்த்துள்ளார்கள். புதிய கன்சோல் டிசைன், புதிய டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் வெப்பநிலை கட்டுப்பாடு (DATC) போன்றவை கார் ஓட்டும் அனுபவத்தை அதிகப்படுத்துகிறது.
இந்தக் காருக்கு 5 பவர்ட்ரையன் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஹூண்டாய் நிறுவனம். சமீபத்திய 1.5 லிட்டர் MPi பெட்ரோல் இஞ்சின், 1.5 லிட்டர் CRDi டீசல் இஞ்சின் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட 1.5 லிட்டர் டர்போ GDI பெட்ரோல் இஞ்சின் போன்றவை இந்தப் பட்டியலில் அடங்கும்.