கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்… தேர்தல் பணிகளை துரிதப்படுத்துங்கள்… நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தான் பார்த்துக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தலைமையில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார். தேர்தல் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும், செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், கட்சி தலைவராக தான் என்ன செய்ய வேண்டும், கட்சி தலைமை மேல் உள்ள குறைகள் என்ன என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கருத்துகளை கேட்டறிந்தார்.
இதற்கிடையே, செயற்குழுக் கூட்டத்திற்கு பிறகு செய்தயாளர்களை சந்தித்த அக்கட்சியின் துணைத்தலைவர் மௌரியா, ” கமல்ஹாசனின் சிந்தனையோடு ஒத்துப் போகக் கூடிய கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும் அவ்வாறு இல்லாத சூழலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயங்கமாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.