தெருவோர கடையில் தயாரான ஓரியோ பஜ்ஜி..! உணவுப் பிரியர்களை அதிர்ச்சியாக்கிய வைரல் வீடியோ!

நம் நாட்டின் தெருவோர உணவுகளில் பஜ்ஜிக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. சிறுவர்களுக்கு பிடித்த மாதிரி மொறு மொறுப்பாகவும் பெரியவர்கள் விரும்பும் வகையில் சுவையாகவும் இருப்பதால் அனைத்து வயதினருமே பஜ்ஜியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

முக்கியமாக மாலை நேரத்தில் டீ, காஃபியோடு சேர்த்து சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதால் இதற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சைவ உணவுப் பிரியர்களுக்கு பிடித்தமான வெங்காய பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி முதல் அசைவப் பிரியர்களுக்கு பிடித்தமான சிக்கன் பஜ்ஜி, மீன் பஜ்ஜி எனப் பல வகைகள் இதில் உள்ளது.

இன்றைய நவீன உலகத்தில் எல்லாவித உணவுகளிலும் புதிய மாற்றங்களும் சோதனை முயற்சிகளும் செய்யப்படுகின்றன. அதில் பஜ்ஜியும் விதிவிலக்கல்லவே. இதற்கு முன்பு கூட பஜ்ஜி பேஸ்ட்ரி, பார்லி-ஜி பஜ்ஜி, பானிபூரி பஜ்ஜி போன்றவை உணவுப் பிரியர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் இப்போது புதிதாக ஒன்று சேர்ந்துள்ளது. அதுதான் ஓரியோ பஜ்ஜி. இதைப் பார்த்து ஒட்டுமொத்த உணவுப்பிரியர்களுமே திகைத்துப் போயிருக்கிறார்கள்.

இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கடையில் இருக்கும் நபர் புதிய ஓரியோ பிஸ்கட் பாக்கெட் ஒன்றை உடைக்கிறார். அதன்பிறகுதான் முக்கிய திருப்பமே இருக்கிறது. ஓரியோ பிஸ்கட்டை வைத்து என்ன செய்யப் போகிறார் என நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஒவ்வொரு பிஸ்கட்டாக கடலை மாவில் நனைத்து எண்ணெயில் நன்றாக பொரிக்கிறார். பஜ்ஜி நன்றாக வெந்ததும், அதை பரிமாறுவதற்கு தயாராகிறார்.

அகமதாபாத்தில் முதல் முறையாக ஓரியோ பஜ்ஜி என பெருமிதத்தோடு இந்த வீடியோவிற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. உணவுப் பிரியர்களிடம் மட்டுமல்லாமல் அனைத்து தரப்[பு மக்களிடமும் இந்த ஓரியோ பஜ்ஜி வீடியோ கவனம் பெற்றது.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த தனித்துவமான பஜ்ஜி தயாரிப்பு பலரது மத்தியிலும் ஆர்வத்தையும் சந்தேகத்தையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. அடக் கடவுளே! இப்படியொரு பஜ்ஜியை நான் கனவில் கூட பார்த்ததில்லை.என ஒருவரும், இது சுத்த பைத்தியகாரத்தனமாக உள்ளது. இதையெல்லாம் ஏன் சோசியல் மீடியாவில் பதிவு செய்கிறார்கள் என இன்னொருவர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

நல்ல உணவை கெடுத்துவிட்டார்கள் என ஒருவர் நக்கலாகவும் இந்த வீடியோவை என் நண்பனுக்கு அனுப்பினால் நிச்சியம் அவன் இனிமேல் ஓரியோ பிஸ்கட்டை சாப்பிடமாட்டான் என இன்னொருவரும் இது ஒன்றைதான் பார்க்காமல் இருந்தேன்; இப்போது அதையும் பார்த்துவிட்டேன் என்றும் இது பாவத்திற்கு ஒப்பான செயல் என்றும் பலரும் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் இந்த ஓரியோ பஜ்ஜியின் சுவை எப்படியிருக்கும் என கூறவில்லை.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *