ஃபிளிப்கார்ட்டில் ரூ.1.13 லட்சம் மதிப்பிலான லேப்டாப் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பொருள் வாங்குவதாக முடிவு செய்யும் போது, அருகாமையில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மாடல்களை மட்டுமே பார்த்து, கைக்கு கிடைக்கின்ற ஏதோ ஒன்றை வாங்குவதை காட்டிலும் எண்ணற்ற ஆப்ஷன்களை தருகின்ற ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து வாங்குவதை பலரும் விரும்புகின்றனர்.
அதிலும் பண்டிகை கால விற்பனையின் போது வழங்கப்படுகின்ற சிறப்பு சலுகைகள் மற்றும் ஆஃபர்கள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் எதிர்வரும் குடியரசு தின சிறப்பு விற்பனை சலுகை பயன்படுத்திக் கொண்டு flipkart தளத்திலிருந்து ரூ.1.13 லட்சம் மதிப்பிலான லேப்டாப் ஒன்றை அண்மையில் சௌரவ் முகர்ஜி என்ற நபர் வாங்கினார்.
ஆசுஸ் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப் வாங்கியவருக்கு, பார்சலை பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இத்தனைக்கும் டெலிவரி ஏஜெண்ட் முன்னிலையில் தான் அவர் பார்சலை பிரித்தார். கருப்பு கலர் லேப்டாப் ஒன்றை அவர் ஆர்டர் செய்திருந்தார். ஆனால் சில்வர் நிற லேப்டாப் வந்திருந்தது. அதைவிட பெரும் அதிர்ச்சியாக அந்த லேப்டாப் முழுவதும் தூசி படந்து பழையதாக இருந்தது.
இதுகுறித்து டிவிட்டர் தளத்தில் தனது அதிருப்தியை பதிவு செய்த அந்த நபர், “நான் ஃப்ளிப்கார்ட் தளத்தில் புதிய ஆசுஸ் லேப்டாப் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் எனக்கு கிடைத்தது என்னவோ மிக பழைய லேப்டாப் தான். ஆன்லைன் ஸ்டோர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு ஃபிளிப்கார்ட் தளத்தின் சார்பாக உடனடியாக பதில் அளிக்கப்பட்டது. வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துவதாகவும், ஆதார் விவரங்களை தெரிவித்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தயாராக இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியது. வாடிக்கையாளருக்கு நம்பகத்தன்மை வாய்ந்த, சௌகரியமான அனுபவத்தை கொடுப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
இதுகுறித்து டிவிட்டர் தளத்தில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்ட பதிவில், “நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக ஏதோ ஒரு பொருள் கிடைக்கட்டும் என்று நாங்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. நிச்சயமாக உங்கள் பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு காண்போம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏமாற்றங்கள் புதிதல்ல :
ஆன்லைன் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறோரு பொருளை அல்லது சேதம் அடைந்த பொருளை டெலிவரியின்போது பெறுவது இது முதல்முறை அல்ல. சில நாட்களுக்கு முன் விலை உயர்ந்த ஹெட்போன் ஆர்டர் செய்திருந்த நபருக்கு டூத் பேஸ்ட் வந்து சேர்ந்தது. அதே சமயம் இதுபோன்ற தவறான டெலிவரிகளை தவிர்க்க, டெலிவரி உறுதி செய்தல் நடவடிக்கையை ஆன்லைன் ஸ்டோர் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. அதன்படி வாடிக்கையாளர் முன்னிலையில், டெலிவரி ஏஜெண்ட் அந்த பார்சலை பிரித்து காண்பித்து ஒரிஜினல் பொருள் டெலிவரி செய்யப்படுவதை உறுதி செய்கின்றனர்.