பேட்மின்டன் போட்டியில் நடிகை நிவேதா பெத்துராஜ் சாதனை!
கலப்பு இரட்டையர் போட்டியில் தடம் பதித்த நிவேதா பெத்துராஜ், முதலிடம் பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளார்.
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்த நிவேதா பெத்துராஜ், சங்கத் தமிழன், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அத்துடன், தெலுங்கு படங்களிலும் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை தன்வசம் கொண்டுள்ளார்.
மதுரையை பூர்வீகமாக கொண்ட நிவேதா, திரைப்படம் தவிர்த்து பார்முலா கார் பந்தயத்திலும் பங்கேற்று கவனம் ஈர்த்தார். அத்துடன், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளி குவிப்பார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
நடிப்பு, கார் பந்தயம் மட்டும் இன்றி பேட்மின்டன் போட்டியிலும் அதிக ஆர்வம் கொண்டவர் நிவேதா பெத்துராஜ். இந்நிலையில், தனியார் விளையாட்டு அமைப்பு மூலம் நடத்தப்பட்ட பேட்மின்டன் போட்டியில் களம் கண்டு அசத்தியுள்ளார்.
வெறும் போட்டியாளராக மட்டும் இன்றி பங்கேற்காமல் சாம்பியன் பட்டத்தையே முத்தமிட்டு சாதித்துள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்து மகுடம் சூடிய அவர், சாம்பியன் கோப்பையுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நடிகையான நிவேதா பேட்மின்டன் போட்டியில் முத்திரை பதித்து, ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.