தைப்பூசம், குடியரசு தினம்… தொடர் விடுமுறையை முன்னிட்டு 580 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
ஜனவரி 25 ஆம் தேதி தைப்பூசம், 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை வருகிறது.
இதுதொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு 24 மற்றும் 25 அன்று நாள்தோறும் இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் கூடுதலாக 175 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஒட்டு மொத்தமாக 580 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தொடர் விடுமுறை முடிந்து ஞாயிறு (ஜனவரி-28) அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து 24 ஆம் தேதி 5,722 பயணிகளும், 25 ஆம் தேதி 7,222 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இதனிடையே, 25 ஆம் தேதி பெளர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 10 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் அன்றைய தினம் காலை 10 மணி முதல் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.