ஏதர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைப்பு… மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பெங்களூரைச் சேர்ந்த மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஏதர் எனர்ஜி தனது அடிப்படை மாடல் 450எஸ் மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையைக் குறைத்துள்ளது. இந்தியாவில் மூன்று நிறுவனங்களைச் சேர்ந்த மின்சார ஸ்கூட்டர்கள் சந்தையில் அதிரடியை காட்டி வருவது அனைவரும் அறிந்ததே.
இதில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஏதர் நிறுவனம், பிரீமியம் அம்சங்களுடன் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது விற்பனையை அதிகரிக்கவும், பிராண்டை பிரபலப்படுத்தவும் தங்களின் அடிப்படை மாடல் ஸ்கூட்டரின் விலையை ரூ.20,000 வரை நிறுவனம் குறைத்துள்ளது.
அதன்படி, ஏதர் 450எஸ் மாடல் ஸ்கூட்டரை பெங்களூருவில் ரூ.1.09 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். இதே டெல்லியில் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.97,500 ஆக இருக்கும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ‘ப்ரோ பேக்’ எனும் பிரீமியம் அம்சங்களுடன் வரும் இதே மாடல் ஸ்கூட்டரின் விலையில் ரூ.25,000 குறைக்கப்பட்டுள்ளது.
ஏதர் 450எஸ் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால், 115 கிலோமீட்டர் தூரம் வரை செல்லமுடியும். இந்த அடிப்படை வேரியன்ட் ஸ்கூட்டரில் 2.9 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதேநேரம் நிறுவனத்தின் புதிய Ather 450S HR வகை ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 156 கிமீ வரை பயணிக்கலாம். இதில் 5.4 kW மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 நொடிகளில் இந்த பைக் எட்டிப் பிடிக்கும். இதன் உச்ச வேகம் 90 கிலோமீட்டர் ஆகும். இதன் பேட்டரியை 0-80 விழுக்காடு வரை சார்ஜ் செய்ய 6 மணிநேரம் 36 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
இதன் மேம்பட்ட மாடலான ஏதர் 450X மின்சார ஸ்கூட்டர் இப்போது இரண்டு பேட்டரி விருப்பங்களுடன் கிடைக்கிறது. ஒன்று 2.9 kWh திறன் கொண்டதும், மற்றொன்று 3.7 kWh திறன் கொண்டதாகவும் இருக்கிறது. பார்க் அசிஸ்ட், ஆட்டோ ஹோல்ட், ஃபால் சேஃப், கூகுள் மேப்ஸ் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட 7-இன்ச் டிஎஃப்டி தொடுதிரை கொண்ட இன்ஸ்ட்ரூமன்ட் க்ளஸ்டர் ஆகிய அம்சங்களை இந்த பைக் கொண்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 146 கிமீ வரை இந்த பைக்கில் செல்லலாம். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆக உள்ளது. நாட்டில் தங்களுக்கென தனி பாணியை ஒருக்கி பயணித்து வரும் ஏதர் நிறுவனமும், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹீரோ ஃபின்கார்ப் ஆகிய மூன்று நிதி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கடன் உதவிகளை வழங்குகிறது.
ப்ரோ பேக் வாயிலாக, ஏதர் 450எஸ் வாடிக்கையாளர்கள் ரைடு அசிஸ்ட், ஏதர் பேட்டரி பாதுகாப்பு, ஏதர்ஸ்டாக் புதுப்பிப்புகள், மூன்று ஆண்டு இலவச ஏதர் கனெக்ட் சந்தா போன்ற அம்சங்களை பெறலாம். இதனுடன் ஓலா எலக்ட்ரிக், பஜாஜ், ஹீரோ போன்ற நிறுவனங்கள் பெரும் போட்டியில் இருக்கின்றன. ஆனால், புதிய விலையுடன் ஏதர் 450எஸ் அதன் போட்டி வாகனங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதன்படி, 2024 பஜாஜ் சேதக் அர்பேன் விலை ரூ.1.15 லட்சம் ஆகவும், அடிப்படை டிவிஎஸ் ஐக்யூப் ரூ.1.23 லட்சம் ஆகவும் ஓலா எஸ்1 ஏர் விலை ரூ.1.20 லட்சம் ஆகவும் இருக்கிறது. இவை அனைத்து இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.