225 ஏக்கர் அரண்மனையில் ராஜ வாழ்க்கை வாழும் இந்திய கிரிக்கெட் வீரர்.. கோலி, தோனிக்கு கூட இப்படி இல்லை
இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் எனக் கேட்டால் பலரும் விராட் கோலி, தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் பெயர்களை கூறுவார்கள். மூவருமே சில ஆயிரம் கோடி சொத்துக்களை வைத்துள்ளனர். ஆனால், இவர்கள் மூவரையும் மிஞ்சிய ஒருவர் இருக்கிறார். அதுவும் அவர் ஒரு கிரிக்கெட் வீராங்கனை என்றால் யாராலும் அத்தனை எளிதில் நம்ப முடியாது.
அந்த கிரிக்கெட் வீராங்கனை பெயர் மிருதுளா குமாரி ஜடேஜா. குஜராத்தின் சௌராஷ்டிரா அணிக்காக மாநில அளவில் விளையாடி வருபவர், இந்திய அணியில் கூட அவர் ஆடியதில்லை. ஜடேஜா என்றவுடன் அதே சௌராஷ்டிராவில் இருந்து இந்திய அணியில் ஆடி வரும் ரவீந்திர ஜடேஜாவின் உறவினர் என நினைத்து விட வேண்டாம். அவருக்கும், இவருக்கும் ஒரே குடும்பப் பெயர் என்பதை தவிர எந்த தொடர்பும் இல்லை.
மிருதுளா குமாரி ஜடேஜா ராஜ்கோட் ராஜ பரம்பரையை சேர்ந்தவர். அந்த குடும்பத்துக்கு சொந்தமாக ராஜ்கோட்டில் 225 ஏக்கரில் மிகப் பெரும் அரண்மனை உள்ளது. அதில் 150 அறைகள் உள்ளன என கூறப்படுகிறது. அந்த அரண்மனையின் இன்றைய கட்டிட மதிப்பு மட்டுமே 4500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த அரண்மனையில் பழங்கால கார்கள் நிறைய சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த 225 ஏக்கரில் அரண்மனை போக பெரும்பாலான இடங்கள் தோட்டமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு அழகிய குளமும் உள்ளது. இதைத் தவிர அரசர் பயணிக்கும் வெள்ளி ரதமும் அந்த அரண்மனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சொத்து மதிப்புகளை கணக்கிட்டால் வேறு எந்த தற்கால கிரிக்கெட் வீரரின் சொத்து மதிப்பையும் விட அதிகமாக இருக்கும். ஆனால், இந்த சொத்துகள் அனைத்தும் ஒட்டுமொத்த ராஜ்கோட் அரச குடும்பத்துக்கும் பொதுவானதுதான்.
இதனோடு விராட் கோலியின் வீடு மதிப்பை கணக்கிட்டால் இதெல்லாம் ஒரு மதிப்பா? என்றே தோன்றும். விராட் கோலிக்கு மும்பை மற்றும் குருகிராமில் இரண்டு வீடுகளும் அலிபர்க்கில் ஒரு பண்ணை வீடும் உள்ளது. மும்பை வொர்லி வீட்டின் மதிப்பு 34 கோடி எனவும், குருகிராம் பங்களாவின் மதிப்பு 80 கோடி எனவும், பண்ணை வீட்டின் மதிப்பு சுமார் 20 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.