புஜாராவுக்கு எல்லாம் டீமில் இடமில்லை.. வேறு வீரரை அணியில் சேர்த்த ரோஹித் சர்மா.. டெஸ்ட் அணி மாற்றம்
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில், அவருக்கு பதில் வேறு ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இருந்தது இந்திய அணி நிர்வாகம்.
அனுபவ டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்ட போதும் உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் அவர் சிறப்பாக ரன் குவித்து வருகிறார். சமீபத்தில் கூட ரஞ்சி தொடரில் இரட்டை சதம் அடித்து இருந்தார். எனவே, அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரை விடுத்து இதுவரை டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெறாத ரஜத் படிதார் என்ற வீரரை அணியில் சேர்த்து இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.
மத்திய பிரதேச மாநில வீரரான படிதார் ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடிய அனுபவம் கொண்டவர். முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்கள் குவித்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 46 ஆகும். அவர் தனது மாநில அணியில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்து வருகிறார். எனவே, தேவை ஏற்பட்டால் விராட் கோலி பேட்டிங் செய்யும் நான்காம் வரிசையில் களமிறங்க சரியாக இருப்பார் எனக் கருதி அவரை அணியில் சேர்த்து இருக்கிறார் ரோஹித் சர்மா.
இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் புஜாராவுக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது. அதே போல மற்றொரு அனுபவ பேட்ஸ்மேன் ரஹானேவுக்கும் இனி வாய்ப்பு கிடைக்காது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டி இந்தியா ஏ அணியில் இடம் பெற்று இருந்த ரஜத் படிதார் இந்திய அணியில் இடம் பெற்ற நிலையில், அவருக்கு பதிலாக ரிங்கு சிங் இந்தியா ஏ அணியில் இடம் பெற்று இருக்கிறார். ரிங்கு சிங்கும் விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.