மறைந்த பிகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு.. யார் இவர்?
லாலு பிரசாத், ராம்விலாஸ் பாஸ்வான், தேவேந்திர பிரசாத், நிதிஷ் குமார் போன்ற பிகாரின் முக்கிய தலைவர்களுக்கு வழிகாட்டி என்று அழைக்கப்பட்டவர் கர்பூரி தாகூர்.
இந்தியாவில் வழங்கப்படும் மிகவும் உயர்ந்த விருதாக பாரத ரத்னா விருது உள்ளது. நாட்டிற்காக உயரிய சேவை செய்வோர் மற்றும் தங்களது துறையில் அற்புதமாக செயல்படுவோர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில், மறைந்த கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். பிகாரின் சமஸ்திபூரில் 1924-ஆம் ஆண்டில் பிறந்த கர்பூரி தாகூர், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
சோஷலிசக் கட்சியில் சேர்ந்த அவர், 1952-ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பிறகு, எந்தத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவவில்லை. 1970-க்குப் பிறகு, பிகார் முதலமைச்சராக இரண்டு முறை பதவிவகித்த அவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். 1978-ல் அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தார். இவரது முயற்சிகள் காரணமாக, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது.
1988-ஆம் ஆண்டில் காலமான கர்பூரி தாகூர், லாலு பிரசாத், ராம்விலாஸ் பாஸ்வான், தேவேந்திர பிரசாத், நிதிஷ் குமார் போன்ற பிகாரின் முக்கிய தலைவர்களுக்கு வழிகாட்டி என்று அழைக்கப்பட்டவர்.