சுவிஸ்லாந்தில் கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் (படங்கள்)
உலகின் அனைத்து உயிர்களுக்கும் உயிர் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் உணவு முக்கியபங்கு வகிக்கின்றது. அவ்வகையில் விவசாயம் இன்றியமையாததாகும். இத்தொழில் மேன்மையை உலகமே நினைவிற் கொள்ள வேண்டும் என்பதே தமிழர் திருநாளின் தார்ப்பரியம் ஆகும்.
சங்க காலத்திலிருந்து மருத நிலமும் உழவர்களும்⸴ உழவுத் தொழிலின் பெருமையும் பேசப்பட்டு வருகின்றது. இவ்வுலகின் இயக்கத்திற்கு சூரியஒளி அவசியமானது.
குறிஞ்சி நிலத்தில் மருத நிலத்தின் உழவுத் தொழிலின் பெருமையையும் தொன்மையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக சுவிஸ்லாந்து நாட்டின் லுட்சேர்ன் மாநிலத்தில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயமும், தமிழ் மன்றமும் , மாநிலத்தின் பொது அமைப்புக்களும் இணைந்து நடாத்திய தமிழர் திருநாள் 21.1.2024 ஞாயிற்றுக்கிழமை லுட்சேர்னில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பொங்கி சூரியனுக்கு படைத்ததுடன் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம், கலை நிகழ்வாக பரதநாட்டியம், பட்டிமன்றம், வில்லுப்பாட்டு, தமிழ் இளைய தலைமுறையினரின் “பொங்கல் என்றால் என்ன” என்ற குறும்படமும் நிகழ்வுகளாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த Bern ஞான லிங்கேஸ்ர ஆலய குரு சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் புலம்பெயர் தமிழர்களின் முந்தைய தலைமுறையினரின் வாழ்வியலின் வலிகள் பற்றியும், அவ் வலிகளிலிருந்து வலுப் பெற்றுள்ள.
இன்றையை தமிழ்த் தலைமுறையினரின் தொழில்சார் திறமைகள் சுவிஸ்லாந்து நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வாறான பங்கு வகிக்கின்றது என்பதையும், எமது தமிழ் சமுதாய இளைய தலைமுறையினர் தமிழையும், தமிழர் கலாச்சாரத்தையும் எவ்வாறு காக்க வேண்டும், அதற்கு பெற்றோர்களின் பங்களிப்பும என்ன என்பதையும் எடுத்துக்கூறினார்.
லுட்சேர்ன் நகர காவல்துறை அதிகாரி, கத்தோலிக்க சபையின் உறுப்பினர்கள், நகராட்சி நிர்வாக அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு தமிழர்களின் பண்பாடுகளை தாம் மதிப்பதாகவும் அதன் வளர்சிக்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தனர்.