பெயரிலேயே எதிர்பார்ப்பை தூண்டும் வடிவேலு, பஹத் பாசில் படம்!

மாமன்னன் படத்தில் இணைந்து நடித்த வடிவேலு, பஹத் பாசில் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இராமாயணத்தில் வரும் கதாபாத்திரம் ஒன்றின் பெயரை வைத்துள்ளனர். ஆர்பி சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஆர்பி சௌத்ரி 1988 இல் மலையாளத்தில், ஆதிபாவம் என்ற படத்தை, சூப்பர் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற பேனரில் தயாரித்தார். அபிலாஷா நடித்த இப்படம், தமிழில் முதல் பாவம் என்ற பெயரில் வெளியானது. பிறகு சில்க் ஸ்மிதா, அபிலாஷா நடித்த லயனம் படத்தைத் தயாரித்தார். இவை ‘ஏ’ சான்றிதழ் பெற்ற சாப்ட் போர்ன் திரைப்படங்கள். இதன் பிறகு குட்நைட் கொசுவார்த்தி தயாரிப்பாளரான ஆர்.மோகனுடன் இணைந்து சில படங்கள் தயாரித்தார். அவர் விலகிய போது, தனது நிறுவனத்தின் பெயரை சூப்பர் குட் பிலிம்ஸ் என்று மாற்றி தமிழில் முதல் படமாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்குநராக அறிமுகமான புரியாத புதிர் படத்தைத் தயாரித்தார். குறுகிய காலத்தில், சூப்பர் குட் பிலிம்ஸ் என்றால் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படங்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற நற்பெயரை பெற்றார். முக்கியமாக கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், லிங்குசாமி, ராசு மதுரவன், சசி, எழில், கவி.காளிதாஸ், ராஜகுமாரன், பிருந்தா சாரதி உள்பட எண்ணற்ற இயக்குநர்களை அறிமுகப்படுத்தினார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் படங்கள் தயாரித்து வரும் சௌத்ரி, தனது 98 வது படமாக வடிவேலு, பஹத் பாசில் இணையும் படத்தைத் தயாரிக்கிறார். தமிழ், மலையாளம் இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. ஆறு மனமே படத்தை இயக்கிய சுதீஷ் சங்கர் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் 2014 இல் சௌத்ரி மலையாள நடிகர் திலீபை வைத்து தயாரித்த, வில்லாளி வீரன் படத்தை இயக்கியிருந்தார் என்பது முக்கியமானது.

இந்தப் படத்துக்கு மாரீசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாரீசன் ராமாயணத்தில் இராவணனின் மாமனாக வருகிறவர். இந்த மாரீசன், மாய மானாக வந்து சீதையின் ஆசையைத் தூண்ட, அது மாய மான் என்பதை அறியாத சீதை, அந்த மான் எனக்கு வேண்டும் என்று லட்சுமணனிடம் கூற, லட்சுமணன் அதனைத் துரத்திச் செல்ல, தனியாக இருக்கும் சீதையை, மாறுவேடம் பூண்டு வரும் இராவணன் இலங்கைக்கு கடத்திச் செல்வான். அன்று முதல், உண்மைக்குப்புறம்பான பொய் ரூபங்களை குறிக்கும் பெயரானது மாரீசன். அந்தப் பெயரை படத்துக்கு வைத்துள்ளனர். படத்தில் வரும் மாய மான் வடிவேலா, இல்லை பஹத்தா என்ற கேள்வி இந்தத் தலைப்பின் காரணமாக ஏற்பட்டுள்ளது. விரைவில் மாரீசனின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *