கேலோ இந்தியா விளையாட்டு – பதக்க வேட்டையை தொடரும் தமிழ்நாடு அணி
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு அணி ஒரே நாளில் 6 தங்கம் உள்ளிட்ட 18 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இளையோருக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு அணி ஆரம்பம் முதலே அசத்தி வருகிறது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. ஆறாவது நாளான நேற்று தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிகள் பதக்க வேட்டை நடத்தின. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில், தமிழ்நாடு வீராங்கனை பூஜா ஆர்த்தி, மகாராஷ்டிராவின் நிருபாமா துபேவை தோற்கடித்து தங்கம் வென்றார்.
மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போட்டியில் டிராக் சைக்கிள் பந்தயத்தில் 10 கி.மீ மகளிர் பிரிவில் தமிழரசியும், 2 கி.மீ மகளிர் பிரிவில் தன்யதாவும் தங்கப்பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். artistic pair யோகா பெண்கள் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனைகள் பெட்ராசிவானி, மேனகா இணை தங்கப்பதக்கமும், ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு வீரர்கள் மோனிஷ் மகேந்திரன், கபிலன் ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற தடகள போட்டியில் ஆடவர் 110 மீ பிரிவில் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்னு தங்கம் வென்றார். இதேபோல் ஆடவர் பிரிவு 400 மீ ஓட்டத்தில் தமிழ்நாடு வீரர் சரண் தங்கம் வென்றார். இவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டினார்.
விளையாட்டு போட்டிக்கான நிறைவு விழாவிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் வருவார் என எதிர்பார்ப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு வீரர்கள் பதக்கங்களை வென்று வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆறாவது நாள் முடிவில் தமிழ்நாடு அணி 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் என 31 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 14 தங்கம் உட்பட 45 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.