சிஎஸ்கே அணியில் விளையாடப் போகும் ஆர்சிபி ரசிகர்.. தோனி, சென்னை மக்கள் குறித்து பிரமிப்பு பேச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வீரர் என்றால் அது நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா தான். ஐசிசி உலகக் கோப்பை தொடரில் எட்டு இன்னிங்ஸில் 523 ரன்கள் விளாசினார். இதில் அவர் மூன்று சதங்கள் அடித்து இருக்கிறார்.மேலும் ரச்சின் ரவீந்தரா சுழற்பந்துவீச்சிலும் கலக்கக் கூடியவர்.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அவர் பெரும் விலைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் சிஎஸ்கே அவரை ஒரு கோடியை 80 லட்சம் ரூபாய்க்கு எல்லாம் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
ரச்சின் ரவீந்திரா பூர்வீகம் பெங்களூரு. அவருடைய தாத்தா, பாட்டி எல்லாம் கர்நாடகத்தை சேர்ந்தவர்தான். இதனால் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் ரச்சின் ரவீந்திராவின் நீண்ட ஆசை. ஆனால் தற்போது ரச்சின் ரவீந்திரா பெங்களூர் அணியின் ஆஸ்தான எதிரியாக கருதப்படும் சிஎஸ்கே அணியில் இடம்பெற்று இருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரச்சின் ரவீந்திரா, தான் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாட போவதை நினைத்து மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்துள்ளார். மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து கொண்டு சென்னை மக்கள் முன் விளையாட போவதை நினைத்து ஆர்வமுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவரான தோனியுடன் இணைந்து விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும் ஆல்ரவுண்டர் ஜடேஜா உடன் இணைந்து விளையாடும் போது பல விஷயங்கள் குறித்து தான் கற்றுக்கொள்ள முடியும் என்றும் ரச்சன் ரவீந்திரா தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு எவ்வாறு மரியாதை கொடுப்பார்கள் என்பது குறித்து பல நியூசிலாந்து வீரர்கள் தம்மிடம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி உள்ள ரச்சன் ரவீந்தரா சிஎஸ்கே அணிக்காக பல வெற்றிகளை தேடி கொடுக்க தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நியூசிலாந்து வீரர்கள் கான்வே, டேரல் மிச்சல் , சாண்ட்னர் போன்ற வீரர்கள் சிஎஸ்கேவில் இருப்பதும் அணியின் பயிற்சியாளராக பிளமிங் இருப்பதும் தமக்கு நம்பிக்கையை கொடுத்து இருப்பதாகவும், இது தமது கிரிக்கெட் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நம்புவதாகவும் இரட்ச்சின் ரவீந்தரா கூறியுள்ளார்.