ஓடும் ஆம்னி பேருந்தில் வாழை வியாபாரியிடம் 37 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் நூதன முறையில் கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சேர்வைக்காரன் மடம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது 60). இவர் வாழை கமிஷன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வினோ(58). தம்பதி இருவரும் சென்னையில் உள்ள தங்களது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திங்கள் கிழமை திசையன்விளையில் இருந்து சென்னைக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் புறப்பட்டு உள்ளனர்.

60 பயணிகளுடன் திங்கள் கிழமை மாலை திசையன்விளையில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி சென்றுள்ளது. இரவு 9 மணி அளவில் எட்டயபுரம் அருகே தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலக்கரை ஸ்ரீ வெட்காளியம்மன் கோவில் எதிரில் உள்ள சாலையோர உணவகத்தில் சாப்பிடுவதற்காக ஆம்னி பேருந்தை அதன் ஓட்டுநர் நிறுத்தி உள்ளார். அப்போது அந்த ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் இறங்கி உணவகத்துக்கு சென்றுள்ளனர்.

ராஜபாண்டி தம்பதியரும் உணவகத்துக்கு சென்று விட்டு மீண்டும் பேருந்துக்கு வந்து தங்களது உடைமைகளை சரி பார்த்த போது தாங்கள் வைத்திருந்த பை வேறு கோணத்தில் இருந்துள்ளது. இதனால் சந்தேகத்துடன் அதனை திறந்து பார்த்த போது அதிலிருந்த சிறிய ஹேண்ட் பேக் காணாமல் போய் இருந்தது தெரியவந்தது. அந்த சிறிய ஹேண்ட் பேக்கில் 37 சவரன் தங்க நகைகளும், 25 ஆயிரம் பணமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு அந்த நகைகளை ஹேண்ட் பேக்கில் வைத்து எடுத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து 37 சவரன் தங்க நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் ஆம்னி பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆம்னி பேருந்தின் உள்பகுதியில் இளைஞர் ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருப்பதை உறுதி செய்த போலீசார் அந்த நபரின் போட்டோவை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *