3ஆவது முறையாக வீட்டிற்கு சென்ற விராட் கோலிக்குப் பதிலாக 2 டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறும் ரஜத் படிதார்!
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விராட் கோலி விளையாட மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தனிப்பட்ட காரணத்திற்காக முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலிருந்து விலகினார். அப்போதும் தனிப்பட்ட காரணம் என்று சொல்லப்பட்டது. இதே போன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக பயிற்சியிலிருந்து அவசர அவசரமாக விலகினார். அப்போதும் தனிப்பட்ட காரணம் என்று சொல்லப்பட்டது.
தற்போதும் 3ஆவது முறையாக தனிப்பட்ட காரணம் என்று கூறி இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் தான் விராட் கோலிக்குப் பதிலாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் மனோகர் படிதார் அணியில் இடம் பெற்றுள்ளார். இதுவரையில் 45 டி20 போட்டிகளில் விளையாடிய ரஜத் படிதார் 1466 ரன்கள் எடுத்துள்ளார்.
இதில், ஒரு சதமும், 12 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 112 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ரஜத் படிதார், தொடக்க வீரராக களமிறங்கி 16 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 22 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் தான் தற்போது விராட் கோலிக்குப் பதிலாக டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். நேற்று ஹைதராபாத்தில் நடந்த பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் கூட இந்திய அணி வீரர்களுடன் இடம் பெற்றிருந்தார். நாளை நடக்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான்.