சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க இன்றே கடைசி நாள் – அமைச்சர் திட்டவட்டம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கும், தென்மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதனிடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில் புதிய, பிரமாண்ட பேருந்து முனையத்தை தமிழக அரசு அண்மையில் நடைமுறைக்கு கொண்டு வந்தது.
பொங்கல் பண்டிகைக்கு முன்னரே புதிய பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்தாலும் பொங்கல் பண்டிகையின் போது பேருந்துகளை அங்கிருந்து இயக்குவதில் சிக்கல் இருப்பதாக குறிப்பிட்ட தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஜனவரி 24ம் தேதி வரை ஆம்னி பேருந்துகளை வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்க அனுமதிக்க வேண்டும் என்று அனுமதி கோரி இருந்தனர். இதற்கு தமிழக அரசும் அனுமதி அளித்தது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க நாங்கள் இன்னும் தயாராகவில்லை என்று தெரிவித்துள்ள தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மேலும் சில காலத்திற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கூடுதல் அவகாசம் கோரி உள்ளனர்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. ஏற்கனவே தனியார் பேருந்து உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் 24ம் தேதி வரை பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அவர்களே அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுகின்றனர். பேருந்து உரிமையாளர்களுக்காக அரசு செயல்பட இயலாது. மக்களுக்காக தான் செயல்பட முடியும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க இன்றே கடைசி நாள். இனி கிளாகம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து உரிமையாளர்களுக்கும், பயணிகளுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும், போக்குவரத்துத் துறையும் செய்து கொடுத்துள்ளது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.