அயோத்தி போல்.. ஞானவாபி மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்கனும் – மாஜி தொல்லியல் நிபுணர் கேகே முகமது
அயோத்தியை போல் ஞானவாபி மற்றும் ஷாஹி இத்கா நிலத்தை இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற மண்டல இயக்குநர் கேகே முகமது தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இவரது ஆய்வு என்பது மிகவும் முக்கிய காரணமாக இருந்த நிலையில் தான் கேகே முகமது இப்படி பரபரப்பான தகவலை தெரிவித்து அதன் பின்னணி காரணத்தையும் கூறியுள்ளார்.
அயோத்தியில் 2.7 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக 500 ஆண்டுகள் பிரச்சனை என்பது இருந்து வந்தது. இந்த பிரச்சனைக்கு கடந்த 2019ல் தீர்வு காணப்பட்டது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் பிரச்சனைக்கு தீர்வாக அமைந்தது.
அதாவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ராமர் கோவிலுக்கு 2020ல் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது கோவிலில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் கும்பாபிேஷகம் நடந்தது.
பிரதமர் மோடி பங்கேற்று கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள 5 வயது பால ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை செய்தார். இதையடுத்து நேற்று முதல் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக இந்தியாவில் வேறு சில இடங்களிலும் பிரச்சனை என்பது உள்ளது. அயோத்தி ஞானவாபி மசூதி மற்றும் கிருஷ்ண ஜென்ம பூமியான மதுராவில் ஷாஹி இத்கா நிலம் தொடர்பாக பிரச்சனை இருக்கிறது.
இந்நிலையில் தான் இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற மண்டல இயக்குனர் கேகே முகமது பரபரப்பான கருத்தை கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இவர் அங்கு மேற்கொண்ட ஆய்வு என்பது மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது. பிபி லால் தலைமையிலான ஆய்வுக்குழுவில் இவர் இடம்பிடித்து இருந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் அயோத்திர ராமர் கோவில், ஞானவாபி மசூதி குறித்து பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பாபர் மசூதி பகுதியில் தோண்டி ஆய்வு செய்தோம். அப்போது சுவர்களில் சிதைக்கப்பட்ட இந்து கடவுள்கள் போன்ற வடிவங்கள் இருந்தன. மேலும் கல்வெட்டில் மகாவிஷ்ணு பற்றியும், 10 தலைகள் கொண்டவனை கொன்றது பற்றியும் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. இதன் பொருள் என்பது ராமரை குறிக்கிறது. இதன்மூலம் அந்த இடம் யாருடையது என்பது தெளிவாகிறது.
மேலும் தொழில்சார்ந்து தொல்பொருள் ஆய்வாளராக நான் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது அயோத்தியில் ராமருக்கு கோவில் வந்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர் இந்து அல்லது முஸ்லிம் அல்ல. ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக சரியான ரிசல்ட் வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைகிறேன்.