புதுச்சேரி தொகுதியை காங்கிரஸுக்கு மீண்டும் விட்டு கொடுத்தால்.. தலைமையை மிரட்டும் திமுக நிர்வாகிகள்!

லோக்சபா தேர்தலில் புதுச்சேரி தொகுதியை காங்கிரஸுக்கு மீண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது; திமுகதான் போட்டியிட வேண்டும் என அம்மாநில நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.

லோக்சபா தேர்தலுக்கான திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை வரும் 28-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸுக்கு 8 அல்லது 9 தொகுதிகளை ஒதுக்கக் கூடும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியோ 15 தொகுதிகளைக் கேட்போம் என்கிறது.

அதே நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக இடம் பெறும் நிலைமை ஏற்பட்டால் காங்கிரஸுக்கு 4 அல்லது 5 தொகுதிகள்தான் கிடைக்கும். இதனை காங்கிரஸ் ஏற்குமா? என்பதும் தெரியவில்லை. திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை காங்கிரஸ் ஒரு போதும் எடுக்காது என்பது பொதுவான கருத்து.

இதனிடையே புதுச்சேரி லோக்சபா தொகுதி யாருக்கு என்பதில் திமுக- காங்கிரஸ் இடையே பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் எப்படியாவது புதுச்சேரியை காங்கிரஸ் கேட்டுப் பெற்றுவிடுவது வழக்கம்.

இதனை புதுச்சேரி திமுக நிர்வாகிகள் அதிருப்தியுடனேயே ஏற்றுக் கொள்கின்றனர். இம்முறை தொடக்கத்திலேயே திமுக நிர்வாகிகள், புதுச்சேரி தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுத்தரவே கூடாது என்பதை தீவிரமாக வலியுறுத்தி உள்ளனர்.

அண்மையில் புதுச்சேரியில் பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது பேசிய புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்- எதிர்கட்சித் தலைவர் சிவா, லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் திமுக போட்டியிட வேண்டும். அது எங்கள் உரிமை.

திமுகவினருமே புதுச்சேரியில் போட்டியிட்டு வென்ற வரலாறு உண்டு. ஆகையால் புதுச்சேரி தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்காமல் திமுகவே போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த விவகாரத்தில் புதுவை திமுக- காங்கிரஸ் இடையே கடும் மோதல் நிகழ்ந்து வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *