அயோத்தியில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ள மசூதி..!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு மதவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாபர் மசூதியா, ராமர் பிறந்த இடமா என நிலம் தொடர்பாக நடந்த வழக்கில், கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதித்தது. மேலும், மசூதி கட்ட அயோத்தியில் மாற்று இடம் ஒதுக்கித்தரவும் உத்தரவிட்டது. அதன்படி அயோத்தி ராமர் கோவிலில் இருந்து 15 மைல் தொலைவில் தான்னிபூரில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை நடத்தப்பட்டு தரிசனத்துக்கு செவ்வாய்கிழமை முதல் மக்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில், அயோத்தியில் அமைக்கப்பட உள்ள மசூதி பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலத்தில் இண்டோ-இஸ்லாமிக் கலாச்சார அமைப்பு (ஐ.ஐ.சி.எப்) மசூதியைக் கட்ட உள்ளது. இந்த அமைப்பின் மேம்பாட்டு குழுவின் தலைவர் ஹாஜி அர்பத் ஷேக், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மசூதி கட்டுமானம் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த புதிய மசூதிக்கு நபி முகமதுவின் நினைவாக “முகமது பின் அப்துல்லா மசூதி” என பெயரிடப்பட உள்ளது.
முட்டை வடிவத்தில் கட்டப்பட உள்ள இந்த மசூதியில் குவிமாடங்களோ ஒடுங்கிய உயர் கோபுர அமைப்புகளோ கட்டப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சூரிய மின்சார தகடுகள் இந்த மசூதியில் பொருத்தப்பட உள்ளன. சுமார் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த மசூதியில், ஒரே நேரத்தில் 2000 பேர் அமர்ந்து தொழுகை நடத்த முடியும்.
இந்த வளாகத்தில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, சமூக சமையல் கூடம், நவீன நூலகம், அருங்காட்சியகம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன. இதோடு, இந்த வளாகத்தில் ஆராய்ச்சி நிறுவனத்தையும் அமைக்க உள்ளது.
மசூதியின் முதற்கட்ட வடிவமைப்பு அயோத்தியா மேம்பாட்டு ஆணையத்தில் கடந்த 2021ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு மார்ச் 2023ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இறுதி செய்யப்பட்ட மசூதி வடிவமைப்பு பிப்ரவரி மாத மத்தியில் தயாராகும் என்றும், அதற்கு அனுமதி கிடைத்த உடன் மே மாதம் கட்டுமானப்பணி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.