உலகின் முதல் பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து வசதிகளுடன் கூடிய நிரந்தர அரங்கம் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இதன்படி அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில் 16 ஏக்கரில், 44 கோடி ரூபாய் மதிப்பில் ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களாக நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அரங்கத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.
இங்கு, பிரமாண்ட நுழைவு வாயில், வாடிவாசல், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், மருத்துவமனை, காளைகள் சிற்பக்கூடம் என ஏராளமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விளையாடுவதற்கான களம் அரைவட்ட வடிவில் 500 அடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் நான்காயிரத்து ஐநூறு பேர் போட்டிகளை பார்த்து ரசிக்கலாம்.
இந்த ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். மறைந்த முன்னாள் முதமைச்சர் கருணாநிதியின் சிலை மற்றும் காளையுடன் இருக்கும் வீரனின் சிலையையும் திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஏறுதழுவதுல் அரங்கை திறந்து வைத்தன் மூலம் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டேன். தை மாதம் பிறந்து விட்டாலே மதுரையில் பண்பாட்டு திருவிழா தான். அப்படி, தை மாதம் பிறந்தவுடன், அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறி விடுவார்.
சிந்து சமவெளி காலத்து முத்திரைகளிலும் திமில் காளைகள் இடம்பெற்றுள்ளன. முல்லை நில மக்களின் வீர வரலாறு, பழந்தமிழர் இலக்கியத்திலும் ஏறு தழுவுதல் இடம்பெற்றிருந்தது. ஜல்லிக்கட்டு போட்டிகளின் மீது கருணாநிதிக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்ததால் தான், முரசொலி சின்னத்தில் ஜல்லிக்கட்டு காளை இடம்பெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டி கேளிக்கைக்கானது அல்ல; உழவர்களின் வாழ்வுடன் கலந்தது. சாதி பிளவுகளும், மத வேறுபாடுகளையும் கடந்து ஒன்றிணைய வைப்பது ஜல்லிக்கட்டு போட்டி..
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்..
இந்த உரையை தொடர்ந்து பச்சைக்கொடி காண்பித்து, உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.