”ராகுல் காந்திக்கு ஆபத்து”.. யாத்திரையில் மோதும் பாஜக-காங்கிரஸ்! அமித்ஷாவுக்கு கார்கே பரபர கடிதம்
அசாமில் பாரத் ஜடோ நியாய யாத்திரையில், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அம்மாநில போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட கோரி அமித்ஷாவுக்கு, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த பாரத் ஜடோ யாத்திரை காங்கிரஸுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்கொண்டிருந்த இடர்பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்தது, சொந்த கட்சியின் நிர்வாகிகளே கட்சி தலைமைக்கு எதிராக புகார்களை எழுப்பியது, மூத்த தலைவர்களின் விலகல், பாஜகவுக்கு தாவிய முக்கிய நிர்வாகிகள் என காங்கிரஸ் தனது மொத்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டே வந்திருந்தது.
இப்படி இருக்கையில்தான் பாரத் ஜடோ யாத்திரை கட்சியின் தொண்டர்களுக்கு காங்கிரஸ் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்கள் ராகுல் காந்தியுடன் வீதியிறங்கி நடந்தார்கள். களப்பணியில் ஈடுபட்டார்கள், 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தன்னை வளர்த்துக்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டது.
அதன் அங்கமாக தொண்டர்கள் இருந்தார்கள். இந்நிலையில் ‘பாரத் ஜடோ நியாய யாத்திரை’ என இரண்டாம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி தொங்கியுள்ளார்.
இந்த யாத்திரை மணிப்பூரில் தொடங்கி மொத்தமாக 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்ற தொகுதிகள் என 67 நாட்கள் நீள்கிறது. இறுதியாக மகாராஷ்டிராவின் மும்பையில் முடிவடைகிறது. சில இடங்களில் பேருந்திலும், பல இடங்களில் நடத்தும் சுமார் 6,713 கி.மீ தூரத்தை ராகுல் காந்தி இந்த யாத்திரை மூலம் கடக்கிறார்.
பயண திட்டத்தின்படி மணிப்பூர், நாகலாந்தில் யாத்திரையை முடித்த அவர், கடந்த 18ம் தேதி அசாமில் யாத்திரையை தொடக்கினார். இம்மாநிலத்தில் 8 நாட்களில் 17 மாவட்டங்களில் 833 கி.மீ தூரமும் பயணம் மேற்கொள்கிறார். ஆனால் அசாமில் அவர் நுழைந்ததிலிருந்து சலசலப்புகள் மேலெருந்திருக்கின்றன.