அஜித் வழியில் சாதித்த நிவேதா பெத்துராஜ்… வாழ்த்தும் ரசிகர்கள்!
நடிப்பின் காரணமாக ஒருவர் இழக்கும் விஷயங்களை பட்டியலிட்டால் ஆச்சரியமாக இருக்கும். சாமானியர்களைப் போல அவர்களால் தெருவில் இறங்கி நடக்கவோ, சாலையோர கடையில் சாப்பிடவோ, பொருள்கள் வாங்கவோ முடியாது. தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுக்களையும் மூட்டைக்கட்டி வைத்துவிட வேண்டும்.
நடிகர் அஜித்துக்கு பைக், கார் ரேஸ் என்றால் உயிர். சினிமாவுக்கு வரும் முன் அவர் ரேஸ் ப்ரியராகத்தான் இருந்தார். சினிமாவில் நடித்து, நிலையான இடத்தைப் பிடித்தபின், மறுபடி ரேஸ் மைதானத்துக்கு சென்றார். அதனை திரையுலகமே எதிர்த்தது என்றால் 2கே கிட்ஸ்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். உங்களுக்கு ஏதாவது ஒன்று நடந்தால், உங்களை நம்பி முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்கள் கதி என்னாவது என்று வெளிப்படையாக கேள்வி கேட்டனர், விமர்சனம் செய்தனர். இன்று அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இந்த விமர்சனங்களுக்கும் முக்கிய பங்குண்டு.
நடிக்க வந்த பின்பும் தனது விருப்பத்தை விட்டுக் கொடுக்காதவர்கள் சிலர்தான். அதில் நடிகை நிவேதா பெத்துராஜும் ஒருவர். ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமான இவர் நடிப்புடன் தனக்கு விருப்பமான பேட்மிண்டனையும் தவறாமல் பயிற்சி செய்து வருகிறார். டால்ஃபின் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் பேட்மிண்டன் போட்டி நடத்தியது. அதில் மதுரை அணி சார்பாக இரட்டையர் பிரிவில் கலந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் சாம்பியன் பட்டம் வென்றார். தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டே, பயிற்சி எடுத்து, போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது சாதாரணமில்லை. அதனை நிவேதா பெத்துராஜ் சாதித்திருக்கிறார்.