தனது சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த கங்கனா ரனவத்
கங்கனா ரனவத் தீவிர அரசியல் நிலைப்பாட்டுடன் பேசியும், எழுதியும் வருகிறவர். சமீபமாக அவர் நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. அனைத்தும் அட்டர் பிளாப்பாயின. தனக்கு விருப்பமில்லாத நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, அவற்றை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டதோடு, ‘பாய்காட் பாலிவுட்’ ஹேஷ்டேக்கிற்கு ஆதரவளித்தவர், ஒருகட்டத்தில் தோல்விகளின் கனம் தாங்காமல், தயவுசெய்து திரையரங்குக்கு வந்து படங்கள் பாருங்கள், அப்போதுதான் இந்தித் திரையுலகை காப்பற்ற மூடியும் என்று வீடியோ வழியாக பார்வையாளர்களை கேட்டுக் கொண்டார்.
கங்கனா ரனவத் எமர்ஜென்ஸி என்ற படத்தை எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இந்திராகாந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி காலகட்டத்தை பின்புலமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்திராகாந்தியாக கங்கனா ரனவத் நடித்துள்ளார். தீவிர காங்கிரஸ் எதிர்ப்புணர்வு கொண்ட கங்கனா ரனவத், இந்திராகாந்தியாக நடித்திருப்பதை, பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. அவர் எந்த கோணத்தில் இந்திராகாந்தியையும், அவரது கொள்கைகளையும் திரையுல் காட்டுவார் என்பதிலும் விமர்சனங்கள் உண்டு. அதேநேரம் அவரது படத்துக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். சர்ச்சைகளின் வழியாக படத்தை ஓடவைப்பதே அவரது நோக்கம் என்று வெளிப்படையான குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
எமர்ஜென்சி திரைப்படம் 2023 நவம்பர் 24 ம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பிறகு மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிப் போனது. தற்போது, ஜுன் 14 ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
குஜராத் மதக்கலவரத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான பில்கிஸ் பானுவின் கதையை படமாக்கும் எண்ணத்தில், அதற்கான கதையை தயார் செய்து வைத்திருப்பதாக சமீபத்தில் கங்கனா ரனவத் கூறியிருந்தார். இந்தக் கதையை படமாக்க நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்கள் மறுத்துவிட்டன. ஜியோ சினிமா தனக்கு உதவும் என்று நம்பிக்கையோடு அவர்களை அணுகியபோது, கங்கனாவின் அரசியல் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி, உதவ முடியாது என்று கைவிரித்தனர். இந்தப் பின்னணியில் எமர்ஜென்சியில் அவர் என்ன செய்து வைத்திருப்பார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.