Blue Sattai: “சிவகார்த்திகேயனின் அயலான் படுதோல்வி.. இமான் தான் காரணம்” கொளுத்திப் போட்ட ப்ளூ சட்டை

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. ரவிக்குமார் இயக்கிய இந்தப் படம் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் வெளியானது.

இந்நிலையில் அயலான் படுதோல்வியடைய டி இமான் தான் காரணம் என ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

அயலான் தோல்விக்கு காரணம்

இந்தாண்டு பொங்கலுக்கு கேப்டன் மில்லர், அயலான், மிஷன், மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் வெளியாகின. இதில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவியது. முதல் இரண்டு நாட்களில் கேப்டன் மில்லர் படத்துக்கு தான் நல்ல ஓபனிங் இருந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அயலான் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் அயலான் தான் வின்னர் என சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், அயலான் படுதோல்வியடைந்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். மேலும் இது மக்கள் கொடுத்த தீர்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களை சூடாக்கியுள்ளது. இதற்காக ப்ளூ சட்டை மாறன் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில், “அயலான் படத்தை மக்கள் படுதோல்வி அடைய வைத்ததற்கு.. CSK பற்றி இசைமான் கூறிய குற்றச்சாட்டு காரணமா? பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் CSK வின் இமேஜ் சரிந்து இருக்கிறதா?” எனக் கேட்டுள்ளார்.

அதாவது சில மாதங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் குறித்து டி இமான் சொன்ன விஷயம் கோலிவுட்டையே பரபரப்பாக்கியது. இனி சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன், அவர் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் எனக் கூறியிருந்தார். மேலும் அதனை ஓபனாக சொல்ல முடியாது, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் எனவும் பேட்டிக் கொடுத்தது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் டி இமான் தனது முதல் மனைவியை பிரிய சிவகார்த்திகேயன் தான் காரணம் என மறைமுகமாக கூறியிருந்தார். இதற்கு சிவகார்த்திகேயன் விளக்கம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதே சிவகார்த்திகேயன் குறித்து ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தார். இந்நிலையில் அயலான் தோல்விக்கு டி இமான் தான் காரணம் என கொளுத்திப் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ சட்டை மாறன் நடத்திய இந்த வாக்கெடுப்பில் டி இமான் சர்ச்சை தான் அயலான் தோல்விக்கு காரணம் என 56.4 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 43.6 பேர் இல்லை என வாக்களித்துள்ளனர். இதனையடுத்து ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்துள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்கள், அயலான் தோல்வியடைந்திருந்தால் எப்படி 2ம் பாகத்துக்கு படக்குழு ரெடியாகியிருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர். அயலான் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என இயக்குநர் ரவிக்குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *