மக்கள் அதிர்ச்சி..! இறக்குமதி வரி உயர்வு; தங்கம் வெள்ளி விலை உயரும் அபாயம்..!
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியானது தற்போதுள்ள 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்து உள்ளது.
இதன்படி, தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது விதிக்கப்பட கூடிய இறக்குமதி வரியானது இனி, 15 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இதில் அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் அளவில் இருக்கும். 5 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாக இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கின்றது. இவற்றுக்கு கூடுதல் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, விலைமதிப்பற்ற உலோகங்கள் அடங்கிய வினையூக்கிகள் மீதும் இறக்குமதி வரியானது 14.35 சதவீதம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் என்ற அளவிலும், 4.35 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றுக்கு கூடுதல் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய வரி விகிதங்கள் கடந்த 22-ந்தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அறிவிப்பு வெளிவந்து உள்ளது.