3 மாதத்தில் 14,184.90% லாபம்.. லாபத்தை கொட்டும் Waaree Renewable..!!
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வாரீ குழுமம் (Waaree) உலகளவில் வணிக மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்கள் பிரிவில் நீண்ட கால முதலீடுகளில் கவனம் செலுத்தி செயல்படுகிறது.
இந்த குழுமம் 10,000க்கும் மேற்பட்ட சோலார் திட்டங்களை வெற்றிகரமாக நிறுவியுள்ளது.
இந்த குழுமத்தின் துணை நிறுவனம் தான் வாரீ ரெனீவபிள்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம். இந்நிறுவனம் நாட்டின் முன்னணி சோலார் இபிசி நிறுவனமாக விளங்குகிறது. வாரீ ரெனீவபிள்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருக்கிறது மேலும் இந்நிறுவனத்தின் ஆர்டர் புத்தகத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள் குவிந்து கிடக்கிறது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.324.19 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 338.78 சதவீதம் அதிகமாகும். மேலும், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 158.09 சதவீதம் உயர்ந்து ரூ.64.46 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
2023 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனம் வசம் செயல்படுத்தப்படாத 749+ மெகாவாட் திறன் நிறுவும் ஆர்டர் உள்ளது. கூடுதலாக, 5B மேவரிக் சர்வீசஸ் பிடிஒய் நிறுவனத்துடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் இந்நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. மேலும் 70 மெகாவாட் திறன் கொண்ட நிலத்தில் பொருத்த வேண்டிய சூரிய சக்தி திட்டத்தை பெற்றுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, நிறுவன பங்கினை 1:5 என்ற விகிதத்தில் பிரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதேசமயம் இந்த பங்கு பிரிப்பு பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
சிறப்பான டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் மற்றும் பங்கு பிரிப்பு நடவடிக்கை எதிரொலியாக, கடந்த சில வர்த்தக தினங்களாக இப்பங்கு விலை உயர்ந்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்ததகத்தின் இடையே வாரீ ரெனீவபிள்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் பங்கு விலை அப்பர்சர்க்கியூட் அடித்து புதிய 52 வார உச்சமான ரூ.3,008.80ஐ எட்டியது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு 494.88 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 14,184.90 சதவீதம் ஆதாயம் வழங்கி தான் ஒரு மல்டிபேக்கர் பங்கு என்பதை நிலைநிறுத்தியுள்ளது.