திருவண்ணாமலையில் இன்று பௌர்ணமி கிரிவலம் தொடக்கம்… !
பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் வருடத்தின் எல்லா நாட்களிலும் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அத்துடன் இந்த மலையில் பல சித்தர்கள் சுற்றித் திரிவதாகவும், அவரது தரிசனத்திற்காகவும் பக்தர்கள் எந்நேரமும் வந்து செல்லக் கூடிய தலமாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் மலையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி ஒவ்வொரு பௌர்ணமிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
அந்த வகையில் தை மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் இன்று ஜனவரி 24ம் தேதி புதன்கிழமை இரவு 10.06 மணிக்கு தொடங்கி நாளை 25ம் தேதி வியாழக்கிழமை இரவு 11.22 மணிக்கு நிறைவடைகிறது. இந்நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பௌர்ணமியை முன்னிட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.