கிரிக்கெட் வரலாற்றிலேயே மாபெரும் சாதனை.. தோனியின் நீண்ட கால ரெக்கார்டை உடைத்த விராட் கோலி
மும்பை : கிரிக்கெட் வரலாற்றிலேயே யாராலும் எளிதில் தொட முடியாத புதிய சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.
அதுவும் தோனியின் சாதனையை உடைத்து இந்த சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சிறந்த வீரர்களை உள்ளடக்கிய ஐசிசி அணிகளை அறிவிக்கும். கடந்த 2004 முதல் சிறந்த ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணிகளை அறிவித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக சிறந்த டி20 அணியையும் அறிவித்து வருகிறது. இதைத் தவிர ஒவ்வொரு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை முடிவில் சிறந்த ஐசிசி உலகக்கோப்பை அணி அறிவிக்கப்படும்.
இது போன்ற ஐசிசி அணிகளில் சிறந்த வீரர்கள் மட்டுமே இடம் பெற முடியும். அந்த வகையில் முன்னாள் கேப்டன் தோனி மிக அதிக முறை ஐசிசி சிறந்த அணிகளில் தேர்வு செய்யப்பட்ட வீரர் என்ற சாதனையை செய்து இருந்தார். அவர் 13 முறை ஐசிசி அணிகளில் இடம் பெற்று இருந்தார்.
அந்த சாதனையை கடந்த ஆண்டு சமன் செய்த விராட் கோலி, 2023 ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் அணியில் இடம் பெற்று மொத்தம் 14 முறை ஐசிசி அணிகளில் இடம் பெற்ற வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். இதுவரை ஐசிசி ஒருநாள் அணியில் 7 முறையும், டெஸ்ட் அணியில் 3 முறையும், டி20 அணியில் ஒரு முறையும் விராட் கோலி இடம் பெற்று இருக்கிறார். இதைத் தவிர சிறந்த உலகக்கோப்பை அணிகளிலும் அவர் இடம் பெற்று இருக்கிறார்.
மேலும், கடந்த ஆண்டு விராட் கோலி ஐசிசியின் ஒருநாள் அணி, டெஸ்ட் அணி மற்றும் டி20 அணி என மூன்று வித கிரிக்கெட் அணிகளிலும் இடம் பெற்ற ஒரே வீரர் என்ற அரிய சாதனையை நிகழ்த்தி இருந்தார்.