இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்ய போறேன்.. கனவே நிறைவேறுன மாதிரி இருக்கு.. சிஎஸ்கே இளம் வீரர் ரிஸ்வி
ஐபிஎல் ஏலத்தின் மூலம் கிடைத்துள்ள ரூ.8.4 கோடி பணத்தை வைத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை என சிஎஸ்கே இளம் வீரர் சமீர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட இளம் வீரர் சமீர் ரிஸ்வியை பற்றி பேச்சுகள் அதிகமாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதாகும் வீரருக்கு எப்படி சிஎஸ்கே அணி ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கியது என்று ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர். அதிலும் சீனியர் மற்றும் அனுபவ வீரர்களை அதிகமாக பழக்கம் கொண்ட சிஎஸ்கே அணி இளம் வீரரை எப்படி ராயுடுவின் இடத்திற்கு தேர்வு செய்தது என்று விவாதங்கள் நடந்து வருகின்றனர்.
இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான வீரர்களை வளர்த்தெடுக்க சிஎஸ்கே அணி விரும்புவது கண்கூடாக தெரிகிறது. ஏற்கனவே ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் சஹர் ஆகியோர் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரராக மாறியுள்ள நிலையில், அடுத்ததாக முகேஷ் சவுத்ரி, பதிரானா உள்ளிட்ட வீரர்கள் தயாராகியுள்ளனர். அவர்களுக்கு பின் ஹங்கர்கேகரை சிஎஸ்கே அணி தயார் செய்து வருகிறது. தற்போது அவருடன் சமீர் ரிஸ்வியும் இணைந்துள்ளார்.
சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டது குறித்து இளம் வீரர் சமீர் ரிஸ்வி பேசுகையில், தோனியின் கேப்டன்சிக்கு கீழ் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாக உள்ளது. அவருக்கு கீழ் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விடவும் வேறு என்ன மகிழ்ச்சி இருக்க போகிறது.. நான் கனவில் கூட நினைக்காததெல்லாம் இப்போது நடக்கிறது. அவரை சந்தித்து, பேசும் வாய்ப்பு மட்டுமல்லாமல் விளையாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அவரால் நல்ல வீரர்களை சிறந்த வீரர்களாக மாற்ற முடியும். அதற்கான வாய்ப்பு எனக்கும் கிடைத்துள்ளது.
சிஎஸ்கே ஒரு சாம்பியன் அணி. அதிக கோப்பைகளை வென்ற அணியாக உள்ளது. சிஎஸ்கே அணியின் சூழலை பற்றி அதிகமாக கேள்விப்பட்டிருக்கிறேன். தற்போது அங்கு நானும் இணைந்து நல்ல வீரராக மட்டுமல்லாமல் சிறந்த மனிதராகவும் இருப்பேன். இவ்வளவு அதிகமான பணத்தை வைத்து என்ன செய்வதென தெரியவில்லை. எனது பெற்றோரிடம் பணத்தை கொடுத்துவிடுவேன். அதன்பின் அதனை வைத்து என்ன செய்யலாம் என்று முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.