ராமாயணத்துக்கு ஏற்பட்ட கஷ்டம்.. தமிழ் சினிமாவில் எதிரொலித்த கடவுள் மறுப்பு!
கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து தொடங்கப்பட்ட கட்சி என்பதால், ஆரம்பகால திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள், பிரபலங்கள் கடவுள் மறுப்பு கொள்கையைக் கொண்ட நாத்திகர்களாக இருந்தார்கள். குறைந்தபட்சம் பொதுவெளியில் தங்களது ஆன்மிக ஈடுபாட்டை மறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்தது.
சிவாஜி கணேசன் ஆரம்பகாலத்தில் திராவிட அரசியல் சார்பு கொண்டவராக இருந்தார். எம்ஜி ராமச்சந்திரன் கதராடை அணியும் காங்கிரஸ்காரர். கலைஞர் மு.கருணாநிதியுடனான நட்பும், பழக்கமும் எம்ஜி ராமச்சந்திரனை திராவிட கருத்தியலின்பால் ஈர்த்தன. அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஒரே உறையில் இரண்டு கத்திகள் அதிக நாள்கள் இருக்க முடியாதல்லவா. சிவாஜி கணேசன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தது, கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்த, தனது திராவிட சார்பைவிட்டு தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார். இதற்குப் பின்னால் எம்ஜி ராமச்சந்திரன் இருந்தார் என்று சிவாஜி ரசிகர்கள் இன்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
யார் சரி, யார் தவறு என்று தீர்ப்பளிப்பதல்ல நோக்கம். அன்று திராவிட அரசியல் பேசியவர்கள் தங்களது ஆன்மிக ஈடுபாட்டை வெளிப்படுத்த முடியாத நிலை இருந்தது. ஒரு படத்தில் புராண கதாபாத்திரம் குறித்து எழுத வேண்டிய தேவை வந்தபோது, கண்ணதாசன் தனது பெயரில் எழுதாமல் புனைப்பெயரில் எழுதினார். அந்த காலகட்டத்தில் அவரது அரசியல் பயணம் திமுகவில் மையம் கொண்டிருந்தது.
ஐம்பதுகளில் இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது. எம்.ஏ.வேணு, எம்.ஏ.வி.பிக்சர்ஸ் சார்பில் திரைப்படங்கள் தயாரித்து வந்தார். அவருக்கு ராமாயணத்தை திரைப்படமாக்க வேண்டும் என்று ஆசை. தனது டவுன் பஸ் படத்தின் திரைக்கதையை எழுதிய ஏ.பி.நாகராஜனிடம் ஸ்கிரிப்ட் எழுதும் பணியை ஒப்படைத்தார். டவுன் பஸ் படத்தை இயக்கிய கே.சோமுவை இயக்குநராக நியமித்தார். அன்று ராமர், கிருஷ்ணர் வேடங்களில் புகழ்பெற்றிருந்த என்.டி.ராமராவை ராமர் வேடத்திலும், பத்மினியை சீதை வேடத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்தார். ராவணனாக நடிக்க டி.கே.பகவதி தேர்வானார். இவர் புகழ்பெற்ற டி.கே.நாடக கம்பெனியின் டி.கே.சண்முகத்தின் இளைய தம்பி. மிடுக்கான நடையும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர் என்பதால் ராவணனாக நடிக்க இவரை தேர்வு செய்தனர்.
பரதனாக நடிக்க எஸ்.எஸ்.ராஜேந்திரனை அணுகினர். அவர் திமுக உறுப்பினர். பிற்காலத்தில் எம்எல்ஏ ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நடிப்புதான் என்றாலும் தான் நம்பாத புராண கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று அந்த வாய்ப்பை மறுத்தார். பிறகு சிவாஜி கணேசன் அந்த வேடத்தில் நடிக்க, படம் தயாரானது. இதுதான் சிவாஜி நடித்த முதல் புராணப் படமாகும். பிறகு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், விதவிதான புராண கதைகளில் சிவாஜி நடித்தார்.
சம்பூர்ண ராமாயணம் 1958 ஏப்ரல் 14 வெளியானது. ராம பக்தர்களும், ஆன்மிகவாதிகளும் படத்தை வெகுவாக பாராட்டி, அதனை முன்னிலைப்படுத்தினர். படம் பார்த்த ராஜகோபாலாச்சாரியர், சிவாஜியின் நடிப்பில் மகிழந்து, பரதனை கண்டேன் என பாராட்டினார். சம்பூர்ண ராமாயணம் படத்தை எடுக்கும் முன் வேணுவை பலரும் பயமுறுத்தினர். பட்சிராஜா ஸ்டுடியோ ஸ்ரீ ராமமுலு நாயுடு, நாத்திகவாதிகளும், திராவிட கட்சியினரும், படத்தை ஓடவிட மாட்டார்கள், படம் ஓடுகையில் பிரச்சனைகள் செய்வார்கள் என பயமுறுத்தினார். அதையும் மீறித்தான் வேணு படத்தை எடுத்திருந்தார்.
படம் வெளியான போது பலரும் பயமுறுத்தியது போல் நாத்திகர்கள் யாரும் படத்தை எதிர்க்கவோ, கலவரம் செய்யவோ இல்லை. இருந்தும் படம் பெரிதாகப் போகவில்லை. வேணு கடுமையான நஷ்டத்தை சந்தித்தார். 1958 பிப்ரவரியில் இந்திப் படம், ஸ்ரீ ராமபக்த ஹனுமான் தமிழ்நாட்டில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஹனுமான் படம் வந்ததால், ராமர் படம் ஓடவில்லை என்று சம்பூர்ண ராமாயணத்தின் தோல்விக்கு காரணம் சொன்னார்கள்