பள்ளி மாணவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ.. நடந்தது என்ன?
விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் நிகழ்ந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரும் வகையில் எம்எல்ஏ அருள், மாணவர்களின் காலில் விழுந்தார்.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்ட பாகல்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும், மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாமக எம்எல்ஏ அருள் கலந்துகொண்டார். ஆனால், அவரை மிதிவண்டி வழங்க விடாமல் திமுக பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். அத்துடன் மாணவர்கள் முன்னிலையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விலையில்லா மிதிவண்டி வழங்கிய பின் மைக்கில் பேசிக்கொண்டிருந்த பாமக எம்எல்ஏ அருள், திடீரென அங்கிருந்த மாணவ, மாணவிகளில் காலில் விழு முற்பட்டார். ஆனால், அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினார். இருப்பினும், அதில் சமாதானம் அடையாத எம்எல்ஏ, மாணவ, மாணவிகளின் காலில் விழுந்து அங்கு நடைபெற்ற சம்பவத்திற்க வருத்தம் தெரிவித்தார்.
மேலும், கண்ணு உங்க காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் அரசியல் செய்ய விரும்பல. நல்ல ஒழுக்கத்த கத்துக் கொடுக்க வேண்டிய இடத்துல உங்களை அசிங்கப்படுத்திவிட்டார்கள். கட்சிக்காரனாக நான் இங்கு பேசல, உங்கள அசிங்கப்படுத்துன அரசியல்வாதிகளுக்கும் சேர்த்து நான் மீண்டும் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன் என மீண்டும் ஒருமுறை நெடுஞ்சாண்கிடையாக படுத்து மன்னிப்பு கோரினார். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.