ராமாயண கதையே சேலையில் இருக்கே.. அலியாவின் புடவை ரகசியம்.. விலையை என்ன தெரியுமா?
ராமர் கோவில் குடமுழுக்கு மற்றும் திறப்பு விழாவையொட்டி பிரபல இந்தி நடிகை அணிந்து வந்த சேலை ஒன்று சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு மற்றும் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கங்கனா ரனாவத், சிரஞ்சீவி உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவரும் நடிகர் ரன்பீர் கபூரின் மனைவியுமான நடிகை ஆலியா பட் நீல நிற வண்ணத்தில் சேலை ஒன்றை அணிந்து வந்தார். ராமாயணத்தை பின்புலமாகக் கொண்ட காட்சிகள் அந்த சேலையில் அமைக்கப்பட்டிருந்தன.
பலரது கவனத்தையும் ஈர்த்த இந்த சேலை, சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ராமாயண காட்சிகள் அடங்கிய சேலை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.
அதாவது இந்த சேலை கைவினை கலைகளுடன் சுமார் 100 மணி நேர தயாரிப்புக்கு பின்னர் முழுமை பெற்றுள்ளது. மைசூர் பட்டில் இந்த சேலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ராமாயணத்தில் கூறப்படும் முக்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆலியா பட்டின் ஆடை வடிவமைப்பாளர் அமீ படேல் கூறியுள்ளார்.
தசரத மன்னரின் வாக்குறுதி, படகில் குகன் இருக்கும் காட்சி, தங்கமான், சீதை கடத்தப்படுதல், ராமர் சேது பாலம், சீதைக்கு அனுமான் மோதிரத்தை கொடுத்தல், ராமரின் பட்டாபிஷேகம் உள்ளிட்ட காட்சிகள் இந்த சேலையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சேலையின் விலை 45 ஆயிரம் ரூபாய் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலியா பட் இந்த சேலையை அணிந்து வந்ததை தொடர்ந்து இதேபோன்று சேலையை வாங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.