உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டுமா? இந்த துறைகள் தான் பெஸ்ட்!!!

அனைவருக்குமே எப்போதும் காலில் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பும் போது என்பது பிடித்தமான ஒன்றாக இருப்பதில்லை. நம்மில் பலருக்கும் உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கடமைகளும் பொறுப்புகளும் நான் பார்க்கும் வேலையும் நம்முடைய இந்த உலகம் சுற்றும் ஆசைக்கு தடையாக இருக்கின்றன.

சென்ற தலைமுறை வரை நினைத்த போதெல்லாம் உலகம் சுற்றுவது என்பதும், அப்படிப்பட்ட வேலைக்கு ஒத்தியம் பெறுவது என்பதும் மிகவும் சவாலான விஷயமாகவே இருந்து வந்தது. ஆனால் இன்றைய நவீன உலகில் சூழ்நிலைகள் மாறிவிட்டன. ஏனெனில் உலகம் சுற்ற ஆசைபடுபவர்களுக்கு முக்கிய தடையாக இருப்பது, பயணங்களின் போது ஏற்படும் செலவுகள் தான்.

ஆனால், இன்றைய நிலையில் இவ்வாறு உலகம் சுற்றுவதையே முக்கிய பணியாக கொண்ட பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. மேலும் உங்களது பயண செலவுகள் அனைத்தும் நீங்கள் வேலை செய்யும் நிறுவனங்களால் ஏற்கப்பட்டு, முற்றிலும் இலவசமாக உங்களை உலகம் சுற்ற அனுமதிப்பதோடு, நீங்கள் செய்யும் வேலைக்கு ஊதியமும் அளிக்கப்படும்.

உண்மையிலேயே இவ்வாறு உலகத்தை சுற்றி வருவதையே வேலையாக கொண்டு அதற்கு ஊதியம் பெரும் நபர்களும் இருக்கவே செய்கிறார்கள். உதாரணத்திற்கு இன்று சமூக வலைதளங்களில் ட்ராவல் ப்ளாகர்ஸ் என்று அழைக்கப்படும், பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, அவற்றை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து லட்சகணக்கான ஃபாலோவர்களை பெற்று, அதன் மூலம் லட்ச கணக்கில் சம்பாதிக்கும் நபர்களை நீங்கள் கண்டிருக்கலாம்.

நீங்களும் இதை போலவே சுயமாக உலகத்தை சுற்றி வரும் வேளைகளில் ஈடுபடுவதோ, அல்லது அவ்வேலைகளை அளிக்கும் துறைகளில் பணிபுரிவதன் மூலம் அதற்கு ஊதியமும் பெற முடியும். அந்த வகையில் எந்தெந்த வேலைகள் சேர்ந்தால் மகிழ்ச்சியாக பயணம் செய்வதுடன் அதற்கு நல்ல ஊதியமும் பெற முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

விமானப் பணியாளர் / விமானி : உலகம் முழுவதும் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால் விமானியாகவோ அல்லது விமானத்தில் பணிபுரிபவராகவும் வேலைக்குச் செல்வது மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் இதில் பல்வேறு வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக உங்களது பயணம் அனைத்திற்குமே விமான நிறுவனமே பொறுப்பேற்றுக் கொள்ளும்.

அதற்கான செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். தங்குமிடம் உணவு என அனைத்தும் உங்களது விமான நிறுவனத்தின் மூலம் உங்களுக்கு எளிதில் கிடைத்து விடும். விமானி, துணை விமானி, விமான பணிக்குழு ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு வேலையில் நீங்களும் சேர வேண்டுமெனில் அதற்கான பிரத்தியேகமாக பயிற்சிகளை முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையான திறமைகள் : சிறப்பு பயிற்சிகள் மட்டுமின்றி மிக சிறப்பான மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறமையும் கவர்ச்சிகரமான ஆளுமையும் உங்களுக்கு தேவை.

டிராவல் பிளாகர் : இன்றைய நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர்களது ஆதிக்கமே அதிகம் நிறைந்துள்ளது. உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு பயணம் செய்து அவற்றை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம் பல்வேறு சமூக வலைத்தள வாசிகளையும் உங்களால் கவர முடியும். அதிகளவு மக்கள் உங்களது

வீடியோக்களை பார்வையிடும் பட்சத்தில் எந்த அளவிற்கு உங்களது வீடியோ வைரலாகிறதோ அந்த அளவிற்கு உங்களுக்கான வருமானமும் அதிகரிக்கும்.

மேலும், வீடியோ வலைபதிவிலேயே பல்வேறு விதமான வலைபதிவுகள் உள்ளன. உதாரணத்திற்கு இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதை பதிவேற்றம் செய்வது, காடு மலைகள் என சாகச பயணங்களை மேற்கொள்வது, உணவுகள் பற்றிய வீடியோ பதிவகள் மூலம் மக்களை கவர்வது என பல்வேறு வித வீடியோ வலைபதிவுகள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து, அதில் ஆளுமையடைய முயற்சிக்கலாம்

தேவையான திறமைகள்: இதற்காக பிரத்தியேகமாக எந்த ஒரு பயிற்சியும் அல்லது கல்வித் தகுதியும் தேவையில்லை சமூக வலைத்தளங்களை எவ்வாறு சரியாக பயன்படுத்துவது என்ற நுணுக்கங்களை கற்றுக் கொண்டாலே போதுமானது.

கப்பல் பணியாளர்: உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு கப்பலில் பணி புரிவது என்பது மற்றொரு ஏற்ற வேலையாக இருக்கும். ஒரு கப்பல் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பல மாதங்கள் உலகம் முழுவதும் சுற்றி வரும். இதன் காரணமாக கப்பலில் பயணம் செய்பவர்களோடு கப்பல் பணியாளர்களும் உலகத்தின் பல்வேறு பகுதிகளையும் அற்புதமான இயற்கை காட்சிகளையும் கண்டு ரசிக்க முடியும். மேலும் நீங்கள் செல்லும் ஒவ்வொரு நாட்டிற்கும் நீங்கள் தங்குவதற்கான இடம் உணவு மற்ற வசதிகள் அனைத்துமே அந்தக் கப்பல் நிறுவனத்தினால் அளிக்கப்படும்.

பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் கப்பலில் பணியாற்ற முடியும். கிளீனர்கள், நடன கலைஞர்கள், பாடகர்கள், சமையல் கலைஞர்கள் உடற்பயிற்சி ஆசிரியர்கள் போன்ற பலருக்கும் கப்பலில் பணிபுரிய வாய்ப்பு உண்டு.

தேவையான திறமைகள்: உங்கள் துறைக்கான தனிப்பட்ட திறமைகளை தாண்டி மற்றவர்களோடு அற்புதமாக தொடர்பு கொள்ளும் திறமையும், மற்றவர்களுடன் சேர்ந்து பழகும் திறமையும் சூழ்நிலைக்கு ஏற்றபடி உங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் திறமையும் கப்பலில் பணிபுரிய முக்கியமானது.

டிராவல் ஃபோட்டோகிராபர்: விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கை காட்சிகள் ஆகியவற்றை விரும்பி படம் பிடிப்பவராக நீங்கள் இருந்தால் டிராவல் ஃபோட்டோகிராபி என்பது உங்களுக்கு மிகவும் ஏற்றதொரு தொழிலாக இருக்கும். உலகம் முழுவதும் பயணம் செய்து அற்புதமான புகைப்படங்களை எடுத்து, அவற்றை சரியாக மார்க்கெட்டிங் செய்து பிரபலமாக்குவதன் மூலம் நல்லதொரு வருமானத்தை நீங்கள் பெற முடியும்.

எந்த அளவிற்கு பதிப்பகங்கள் மற்றும் மற்ற நிறுவனங்கள் உங்களது புகைப்படங்களை விரும்புகிறார்களோ அந்த அளவிற்கு உங்களது வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

தேவையான திறமைகள்: அற்புதமான புகைப்படம் எடுக்கும் திறமையை தாண்டி, சந்தைப்படுத்தும் உத்திகளையும் சமூக வலைத்தள கருவிகளை சரியாக கையாளும் திறமையும் இந்த தொழிலுக்கு முக்கியமானதாகும்.

மொழிபெயர்ப்பாளர்: அந்நிய மொழிகளில் நீங்கள் தேர்ச்சி பெற்றவராகவும் உலகம் முழுவதும் பயணம் செய்வதற்கு ஆர்வம் கொண்டவராகவும் இருந்தால் மொழி பெயர்ப்பாளர் பணியானது உங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். இன்றைய நவீன உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் உலகின் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்கின்றனர். அது போன்று சமயங்களில் மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேவையானது மிகப் பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

நீங்கள் மிகவும் தேர்ச்சி பெற்ற மொழி எந்த நாட்டில் அதிக அளவு பேசப்படுகிறதோ, அந்த பகுதிகளுக்கு குடி பெயர்ந்து அங்கு தனியாரிலோ அல்லது அரசாங்கத்திலோ மொழிபெயர்ப்பாளராக வேலை செய்ய முடியும். ஆனால் இதற்கு நீங்கள் வேற்று மொழியை நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்தவராக இருப்பது அவசியம்.

தேவையான திறமைகள்: மொழிபெயர்ப்பு திறமையை தாண்டி கலைகள் மற்றும் பண்பாடுகளை பற்றிய புரிந்துணர்வு, எழுதும் திறமை, மற்றவர்களிடம் சரியாக தொடர்பு கொள்ளும் திறமை ஆகியவை இந்த வேலைக்கு முக்கியமானதாகும்.

சுற்றுலா வழிகாட்டி:

சுற்றுலா வழிகாட்டியாக பணி செய்வது என்பது உலகம் சுற்றுவதற்கு ஏற்ற மற்றொரு தொழிலாகும். சுற்றுலா செல்பவர்களுக்கு தேவையான தகவல்களை கொடுத்து அவர்களை சரியாக வழி நடத்தி அவர்கள் சுற்றுலா திட்டத்தை மிகவும் செம்மையாக நடத்திக் கொடுப்பதே ஒரு நல்ல சுற்றுலா வழிகாட்டியின் பணியாகும். அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அந்த இடங்களின் வரலாறு மற்றும் அந்த இடத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பல இதர தகவல்களையும் சுற்றுலா செல்பவர்களுக்கு விளக்கி கூறி அந்த இடத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் புரிந்து வைத்துள்ளவராக ஒரு சுற்றுலா வழிகாட்டி இருக்க வேண்டும்.

தேவையான திறமைகள்: அந்தந்த இடங்களை பற்றிய அறிவைத் தாண்டி, மற்றவர்களுடன் சிறப்பாக பழகும் குணம், அற்புதமான பேச்சுத்திறமை ஆகியவை இத்தொழிலுக்கு முக்கியமானவை ஆகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *