26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்தி சினிமா பக்கம் திரும்பிய ஜோதிகா..!
திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகியிருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்திற்கு பின் மீண்டும் நடிப்பிற்கு திரும்பினார்.
அதன்பின் ராட்சசி, மகளிர் மட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ஜோதிகா, உடன்பிறப்பே படம் அவருக்கு 50வது படமாக அமைந்தது.
இந்நிலையில் ஜோதிகாவிற்கு மலையாளம், இந்தி திரைத்துறைகளில் இருந்து வாய்ப்புகள் வர தொடங்கியது. அண்மையில் மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து நடித்த “காதல் தி கோர்” திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் 26 ஆண்டுகளுக்கு பின் ஜோதிகா மீண்டும் இந்தி சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.
சூப்பர் 30, கன்பத் உள்ளிட்ட படங்களை இயல்க்கிய விகாஸ் பால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைத்தான். அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
குஜராத்தி மொழியில் உருவான “வாஷ்” என்ற படத்தின் ரீமேக்காக சைத்தான் உருவாகியுள்ளது. பில்லி, சூனியம் என்று கூறப்படும் பிளாக் மேஜிக் மற்றும் ஹாரர் ஜானரில் உருவாகிய திரைப்படம் குஜராத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது. தற்போது இதனை பாலிவுட்டுக்கு ஏற்றவாறு படமாக்கப்பட்டுள்ளது.
இதில் நடிகை ஜோதிகா மற்றும் மாதவன் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில், போஸ்டரிலேயே அஜய் தேவ்கன், மாதவன் மற்றும் ஜோதிகா ஆகியோர் தோன்றியுள்ளனர். மார்ச் 8ஆம் தேதி ரிலீஸாக உள்ள திரைப்படம், ஜோதிகாவிற்கு பாலிவுட் கம்பேக் படமாக அமைய உள்ளது.