இன்று தைப்பூச திருவிழா தேரோட்டம் : பழனியில் பக்தர்கள் குவிந்தனர்..!
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி புறப்பாடு நடந்து வருகிறது.
6-ம் நாளான நேற்று இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை முதல் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பழனியை நோக்கி குவிந்துள்ளனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வருவதால் பழனி நகரின் அனைத்து சாலைகளும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கின்றது.
காலை 7.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
தைப்பூசத்தன்று முருகனை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.