தங்கத்தின் மேலே வாழும் மக்கள்… ‘City on Gold’ என்ற அதிசய நகரம் குறித்து தெரியுமா?
பலரும் ஆச்சரியப்படும் விஷயங்களில் தங்கக் குவியலும் ஒன்று. அப்படிப்பட்ட நிலையில், சில நேரம் யாராவது அதைக் கொள்ளையடிப்பதில் குறியாக இருப்பார்களோ என்ற அச்சமும் நம்மில் பலருக்கும் ஏற்படும். ஆனால் இன்று நாம் தங்கக் குவியலில் கட்டப்பட்ட ஒரு நகரத்தைப் பற்றிதான் பார்க்கப்போகிறோம். (படம்: ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் லா ரின்கோனாடாவின் இந்தப் படத்தை விண்வெளியில் இருந்து படம்பிடித்துள்ளது).
பல நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த போதுமான தங்கம் இந்த City on Gold-ன் கீழே உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நகரம் விண்வெளிக்கு மிக அருகில் (City Closest To Space) உயரத்தில் அமைந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆக, எல்லோராலும் இங்கு வாழ முடியாது.
தென் அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள லா ரின்கோனாடா நகரத்தைப் பற்றிதான் பேசுகிறோம். இது உலகின் மிக உயரமான நகரமாக கருதப்படுகிறது, அதன் உயரம் 5,500 மீட்டருக்கும் அதிகமாக உள்ளது. இந்த காரணத்திற்காக, ரின்கோனாடா விண்வெளிக்கு மிக அருகில் உள்ள நகரம் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது. உயரம் காரணமாக, இது கிரீன்லாந்தைப் போல குளிராக இருக்கிறது, சராசரி வெப்பநிலை மைனஸுக்கு செல்கிறது. நகரத்தின் மக்கள் தொகை சுமார் 60 ஆயிரம் என சொல்லப்படுகிறது. மக்கள் மிக வேகமாக இங்கு வந்து குடியேறுகிறார்கள். அதுமட்டுமின்றி, இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்வதாக தகவல் உண்டு.
நகருக்கு அடியில் பல தங்கச் சுரங்கங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆம், ஆண்டெஸ் மலையில் அமைந்துள்ள இந்த லா ரின்கோனாடா நகருக்கு அடியில் பல தங்கச் சுரங்கங்கள் உள்ளன. சட்டப்படி, இங்கு சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி இல்லை, இன்னும் பல நிறுவனங்கள் சட்டவிரோதமாக இங்கு தங்கச் சுரங்கங்களை தோண்டவும் செய்கின்றன. இங்குள்ள பொருளாதாரம் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களைச் சார்ந்துள்ளது. ஆண்கள் தங்கச் சுரங்கங்களில் வேலை செய்கிறார்கள், பெண்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பாறைத் துண்டுகளுக்கு இடையே தங்கத் துகள்களைத் தேடி எடுக்கின்றனர்.
இங்கு 50 சதவீத ஆக்சிஜன் மட்டுமே கிடைக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஊழியர்கள் 30 நாட்கள் ஊதியம் இல்லாமல் பணிபுரிந்து, 31ஆம் தேதி சுரங்கத்தில் இருந்து அவ்வளவு தாதுவையும் எடுக்க அனுமதிக்கின்றனர். அந்தத் தாதுவில் இருந்து சுரங்கத் தொழிலாளர்கள் எந்த உலோகத்தைப் பிரித்தாலும் அது அவர்களுடையது. பெரும்பாலான சுரங்கத் தொழிலாளர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை, எனவே அவர்களின் கடின உழைப்பு தூக்கி எறியப்பட்ட நிலையில்தான் இருப்பதாக கூறுகின்றனர். இந்த நகரத்தில் யாரும் வரி வாங்குவதில்லை, நிர்வாகமும் இல்லை. இதனால் எந்த வித வசதியும் இல்லை. சாலைகள் மற்றும் வடிகால் அமைப்பு என எதுவும் இல்லை என தெரிகிறது. இந்த நகரத்தில் ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. சாதாரண பகுதிகளுடன் ஒப்பிடும்போது, இங்கு 50 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே கிடைக்கிறது. இங்குள்ளவர்கள் பழகிவிட்டார்கள், ஆனால் வெளியில் இருந்து யாராவது வந்தால் வாழ்க்கை சுலபமாக இருக்காது என உறுதிபட கூறுகின்றனர்.