14 ரன்கள் தேவை.. சவுரவ் கங்குலியை நெருங்கிய ரோகித் சம்ரா.. ஹிட்மேன் படைக்கப்போகும் ரெக்கார்ட்!
இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிக்க இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. சீனியர் வீரர்களான விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் இல்லாமல் 13 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி முதல்முறையாக களமிறங்கவுள்ளது. இதனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பேஸ் பால் அணுகுமுறையுடன் களமிறங்கும் இங்கிலாந்து அணிக்கு சொந்த மண்ணில் பாரம்பரிய முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வரும் இந்திய அணி எப்படி சவால் அளிக்கும் என்ற ஆர்வம் சர்வதேச அளவில் நிலவி வருகிறது. ஸ்பின்னர்களுக்கு சாதகமாக ஐதராபாத் மைதானம் இருக்கும் என்பதால், இங்கிலாந்து அணி 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்க உள்ளது.
இதனிடையே இந்த டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று அனைத்து வடிவங்களிலும் சேர்த்து அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். 664 போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், 34,357 ரன்களை விளாசி இருக்கிறார்.
இவருக்கு பின் இரண்டாவது இடத்தில் விராட் கோலி 522 போட்டிகளில் விளையாடி 26,733 ரன்களை விளாசி இருக்கிறார். தொடர்ந்து 3வது இடத்தில் ராகுல் டிராவிட் 504 போட்டிகளில் விளையாடி 24,064 ரன்களை சேர்த்துள்ளார். இவரைத் தொடர்ந்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 18,433 ரன்களுடன் 4வது இடத்திலும், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 18,420 ரன்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு வெறும் 14 ரன்கள் தேவையாக உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 14 ரன்களை விளாசினால், இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய 4வது வீரர் என்ற பெருமையை ஹிட்மேன் பெறுவார். 467 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 46 சதங்கள் மற்றும் 100 அரைசதங்கள் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது.