கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வர் சித்தராமையா உத்தரவு
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நிதிச் சுமையை காரணம் காட்டி, மத்திய, மாநில அரசுகள் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளித்தது. இந்த நிலையில் கர்நாடக அரசு நேற்று, 2006-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இது குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது, ‘கர்நாடகாவில் கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 13 ஆயிரம் பேர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று நாங்கள் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததை கவனித்தேன். அவர்களின் கோரிக்கைகள் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்தேன். இந்த திட்டம் 13 ஆயிரம் ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது என்று நம்புகிறேன். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.