ஓசூர் – பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் திட்ட சர்வேக்கான ஒப்பந்தம்
சென்னை: கர்நாடக மாநிலம் ஓசூர் – பொம்ம சந்திரா இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனியார் நிறுவனத்துடன், 29.44 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் முன்னிலையில், திட்ட இயக்குனர் அர்ச்சுணன், தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் மற்றும் பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் தலைவர் ஜான் ராஜ் குமார், ஹபோக் கன்சல்டன்ட்ஸ் தலைவர் கோபால் குமார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “பொம்ம சந்திரா – ஓசூர் இடையே, 20 கி.மீ., தூரத்திற்கு, புதிய மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அறிக்கை தயாரிக்க, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதில்,இரு மாநிலங்களை இணைக்கும் வகையில் தமிழகத்தில் 8 கி.மீ., கர்நாடகாவில் 12 கி.மீ.க்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படும். சாத்தியக்கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த பின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்,” என்றார்.