மாருதி கார்களை வாங்குறவங்க வருஷா வருஷம் அதிகமாயிட்டு போறாங்க!! டாப்-10 லிஸ்ட்டில் 7 மாருதி சுஸுகி கார்கள்
இந்தியா, உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனாலேயே பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது கார்களை விற்பனைக்கு கொண்டுவர விரும்புக்கின்றன. இருப்பினும், அவற்றுள் வெற்றிப் பெற்றவை என்று பார்த்தால், ஹூண்டாய், கியா என மிக சில வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டும்தான்.
ஏனெனில், நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மாருதி சுஸுகியையே தேடி செல்கின்றனர். மாருதி சுஸுகியும் முழு இந்திய கார் உற்பத்தி நிறுவனம் கிடையாது. இந்தியாவின் மாருதியும், ஜப்பானின் சுஸுகியும் இணைந்து உருவானதே மாருதி சுஸுகி ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் அசால்ட்டாக 1 இலட்சம் கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகியின் ஆதிக்கம் கடந்த 2023ஆம் ஆண்டிலும் தொடர்ந்துள்ளது.
கடந்த 2023இல் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் முதல் 4 இடங்களை மாருதி சுஸுகி கார்கள் இடம்பிடித்து உள்ளன. இன்னும் சொல்லப்போனால், இந்த டாப்-10 லிஸ்ட்டில் 7 இடங்களில் மாருதி சுஸுகியின் கார்கள் உள்ளன. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை இந்தியாவின் கார் என அழைக்கப்படும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் பிடித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தம் 2 லட்சத்து 3,469 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2022ஆம் ஆண்டில் 1 லட்சத்து 76,424 ஸ்விஃப்ட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டில் 27 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்விஃப்ட் கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஸ்விஃப்ட்டிற்கு அடுத்து 2வது இடத்தை மாருதி சுஸுகியின் உயரமான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் 2 லட்சத்து 1,301 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. ஆனால், 2022ஆம் ஆண்டில் இதனை காட்டிலும் 16 ஆயிரத்திற்கும் அதிகமான வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஸ்விஃப்ட், வேகன்ஆர் இவை இரண்டும் தான் கடந்த ஆண்டில் 2 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.
3வது மற்றும் 4வது இடங்களில் உள்ள மாருதி சுஸுகி கார்களாவன பலேனோ மற்றும் பிரெஸ்ஸா ஆகும். இதில், பலேனோ ஹேட்ச்பேக் கார் கடந்த 2023இல் 1 லட்சத்து 93,989 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை காட்டிலும், 2022இல் ஏறக்குறைய 8 ஆயிரம் பலேனோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. பிரெஸ்ஸா கார்கள் கடந்த 2023இல் 1 லட்சத்து 70,588 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டை விட பிரெஸ்ஸா கார்களின் விற்பனை சுமார் 40 ஆயிரம் அதிகரித்துள்ளது. ஏனெனில், 2022ஆம் ஆண்டில் 1 லட்சத்து 30,563 பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஒருவழியாக, 5வது இடத்தில் மாருதி சுஸுகி அல்லாத காராக டாடா நெக்ஸான் உள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களுள் ஒன்றான டாடா நெக்ஸான் கடந்த ஆண்டில் மொத்தம் 1 லட்சத்து 70,311 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
6வது இடத்தை மாருதி சுஸுகி டிசைர் 1,57,522 யூனிட்களின் விற்பனை உடனும், 7வது இடத்தை ஹூண்டாய் கிரெட்டா 1,57,311 யூனிட்களின் விற்பனை உடனும் பிடித்துள்ளன. இந்த லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களை டாடா பன்ச், மாருதி சுஸுகி ஈக்கோ மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் பெற்றுள்ளன. இவை கடந்த 2022ஆம் ஆண்டில் முறையே 150182, 136010 மற்றும் 129968 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.