தனித்து போட்டி : மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் அறிவிப்பு..!
மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கினார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு விவகாரம் பல்வேறு கூட்டணி கட்சிகளுக்கும் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை கூறுகையில், “காங்கிரஸ் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நான் ஏற்கனவே மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று கூறி வந்தேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் மதசார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் பாஜகவை நாங்கள் தோற்கடிப்போம்.
நாங்கள் அவர்களுக்கு (காங்கிரஸ்) கொடுத்த அனைத்து முன்மொழிவுகளையும் அவர்கள் நிராகரித்தார்கள். அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் முடிவை நாங்கள் எடுத்தோம். நாங்கள் இன்டியா கூட்டணியில் இருக்கும் நிலையிலும், ராகுல் காந்தியின் யாத்திரை மேற்கு வங்கம் வழியாக செல்வதை மரியாதைக்காக கூட எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு எங்களுடன் எந்த உறவும் இல்லை. மாநிலக் கட்சிகள் பலமாக உள்ள மாநிலங்களில் அவை தனித்துப் போட்டியிட வேண்டும். காங்கிரஸ் கட்சி மற்ற இடங்களில் போட்டியிடலாம் என்று நாங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 3 இடங்களை மட்டுமே திரிணமூல் காங்கிரஸ் ஒதுக்கியதாக கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், இதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளது இன்டியா கூட்டணியினரிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று (புதன்கிழமை) அளித்தப் பேட்டியில், “வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும். இதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சியை நேசிக்கிறார்கள். அவர்கள் ஆம் ஆத்மிக்கு 92 சட்டசபை இடங்களை வழங்கியுள்ளனர். பஞ்சாபில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் ஆம் ஆத்மி கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முன்மொழிவுக்கு கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்டியா கூட்டணி ஜெயிக்குமா என்பதைவிட, இது எத்தனை நாள் நீடிக்கும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வியாக இருந்தது. இந்நிலையில், இரண்டு மாநில முதல்வர்களின் இந்த நகர்வு, ‘இன்டியா’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.