தமிழகம் முழுவதும் பிப்.1-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பிப்.1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான, பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர் நிகழ்வுகளாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
கடந்த வாரம், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மகன், மருமகள் மீது கொடுத்துள்ள புகார் நாட்டையே உலுக்கி இருக்கிறது.
தி.மு.க. எம்.எல்.ஏ. தனக்கு தொடர்பில்லை என்று சொல்வதும், காவல் துறை கைது செய்யாமல் காலம் கடத்துவதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. ஆகவே தி.மு.க. அரசைக் கண்டித்து, அ.தி.மு.க. சார்பில், கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், பிப்.1 – வியாழக்கிழமை காலை 10 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு, தி.மு.க. அரசுக்கு தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.