என் பொண்ணு கேக்குதா உன் பையனுக்கு…இளைஞரின் தந்தையை நிர்வாணமாக்கிய கொடூரம்!
வேப்பூர் பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் பார்த்தசாரதி. இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகள் சுசித்ராவும் காதலித்து வந்தனர். இருவரும் பட்டியலில் சமூகத்தில் ஒரே பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் காதலில் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என காதல் ஜோடி நம்பியது. ஆனால் பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் பார்த்தசாரதி – சுசித்ரா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பார்த்தசாரதியின் வீட்டிற்குள் புகுந்து அவரது தாய்-தந்தையை கொடூரமாக தாக்கினர். மேலும் பார்த்தசாரதியின் தந்தை அண்ணாதுரையை கடுமையாக தாக்கி, ஆடை இல்லாமல் நிர்வாணமாக்கி தரையில் அமர வைத்து துன்புறுத்தினர். இந்த தாக்குதல் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணத்தால் ஏற்பட்ட கொடூர தாக்குதல் குறித்து, பா.கொத்தனூர் கிராமத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் கூட உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பெண் வீட்டார் தடுத்து நிறுத்தி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் பெற்றோருக்கு ஆதரவாக ஊர் பஞ்சாயத்தார் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஊர் பஞ்சாயத்து நிர்வாகிகள் சேர்ந்து பார்த்தசாரதியின் பெற்றோரை அழைத்து பேசியுள்ளனர். தன் மகன் செய்தது தவறு என ஒப்புக்கொண்டு பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் மக்கள் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால் ஊரில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
அதன்பேரில் பார்த்தசாரதியின் பெற்றோர் ஊரார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கொடுமையும் நிகழ்ந்துள்ளது. பார்த்தசாரதியின் பெற்றோர் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. பெண்ணின் பெற்றோர் பண வசதி படைத்தவர்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக பஞ்சாயத்தார் மற்றும் போலீசார் நடந்து கொள்வதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, கடலூர் மாவட்ட எஸ்.பி., ராஜாராம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வேப்பூர் போலீசார் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட தரப்பினரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், தாக்குதலில் காயமடைந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெண்ணின் தந்தை முனுசாமி, அவரின் மருமகன் ராமானுஜம், மகள் கவியரசி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.