கோயில்களில் கொடியேற்றம் ஏன் தெரியுமா உங்களுக்கு?

கோயில் திருவிழா காலங்களில் கொடியேற்றும் வைபவம் நடைபெறுவது வழக்கம். கோயில் திருவிழா தொடக்கத்தின்போது ஏன் கொடி ஏற்றுகிறார்கள் என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

 

பொதுவாக, கொடி என்பது ஆட்சி அதிகாரத்தைக் குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்த நாட்டை பிடித்தால், அங்கு தனது அதிகாரம் வந்து விட்டதை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதேபோன்றுதான், திருவிழா நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்தவே கோயில்களில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது.

இது மக்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளைச் செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும். கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்தச் சடங்குகள் மூலம் கோயில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாகச் சொல்கிறார்கள்.

கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு சக்தி, கொடித் துணி ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோயிலில் கொடி ஏற்றும்போது குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.

இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுந்து போகும்படி நம் மனதை பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். இல்லற வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம் எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.

தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்துவத்தை கொடியேற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலைநிறுத்தப்பட வேண்டும்.

இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாகச் சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவ கணங்களை கோயிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடியேற்றம் நடத்தப்படுகிறது. அதனால்தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாளச் சின்னமாக அமைக்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *